மோர்பி: குஜராத்தின் மோர்பி நகரில் ஓடும் மச்சூ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கேபிள் நடைபாலம் இடிந்ததால் 141 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்து தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாநில காவல்துறை அறிவித்துள்ளது.
பாலத்தை சீரமைப்பதற்காக 7 மாதங்களாக பாலம் மூடப்பட்டு, புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரூ. 2 கோடியில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, குஜராத்தின் புத்தாண்டு தினமான அக்டோபர் 26ம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. அப்போது நடந்த விபத்தில் 141 பேர் பலியாகியுள்ளனர்.
எம்பியின் உறவினர்கள் உயிரிழப்பு: ராஜ்கோட்டைச் சேர்ந்த பாஜக மக்களவை உறுப்பினர் மோகன் குந்தாரியா. இவரின் உறவினர்கள் 12 பேரும் இந்த விபத்தில் தங்கள் உயிரை இழந்துள்ளனர். மோர்பி நகரில் குடியிருக்கும் இவர்கள் குடும்பம், புனரமைக்கப்பட்டு கேபிள் பாலத்தை பார்வையிட சென்றபோது இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். பலியான 12 பேரில் ஐந்து குழந்தைகள், நான்கு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள். இவர்கள் எம்பி மோகன் குந்தாரியாவின் உடன்பிறந்த மூத்த சகோதரரின் நெருங்கிய உறவினர்கள்.
விபத்து நடந்ததில் இருந்து சம்பவ இடத்தில் இருந்து மீட்பு பணிகளை கவனித்துவரும் மோகன் குந்தாரியா தங்கள் குடும்பத்தில் நிகழ்ந்துள்ள இந்த சோகம் குறித்து ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டார். “ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் எங்களது உறவினர்கள் பிக்னிக்காக கேபிள் பாலம் வந்தனர். சம்பவம் நடந்த அரை மணி நேரத்திற்குப் பிறகு நான் அங்கு சென்றேன், நேற்று முதல் அந்த இடத்தில் இருந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளேன்” என்றுள்ளார்.
17 ரூபாய் டிக்கெட்: புனரமைக்கப்பட்ட கேபிள் பாலத்தை பார்வையிட 17 ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை வாங்கிக்கொண்டு சுமார் 400 முதல் 500 பேர் வரை ஒரேநேரத்தில் பாலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடுவதற்கு முன் பெறப்பட வேண்டிய Fitness Certificate பெறப்படவில்லை என்று மோர்பி நகர மன்றத் தலைவர் சந்திப்சின் ஜாலா குற்றம் சாட்டியுள்ளார். இந்த பாலம் 125 பேரை மட்டுமே தாங்கக் கூடியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், சம்பவத்தின்போது குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட சுமார் 500 பேர் பாலத்தின் மீது இருந்துள்ளனர். பாலத்தின் மீது இருந்தவாறு மக்கள் பலரும் சாத் பூஜை செய்துள்ளனர். அப்போது நடந்த விபத்தில் 141 பேர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.