சேலம், அரிசிபாளையம் கவனித் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் மகன் பார்த்திபன். இவருக்கு கடந்த வாரம் ஜெர்மனியிலிருந்து கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று மெசேஜ் வந்திருக்கிறது. அதை நம்பிய பார்த்திபன் மெசேஜில் குறிப்பிட்ட மெயிலில் தொடர்பு கொண்டபோது லிசா பிஞ்சு என்ற இளம்பெண் பேசியிருக்கிறார்.
அவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் கிடைக்கும் லாபங்களை பற்றி எடுத்துரைத்திருக்கிறார். அவர் பேச்சை நம்பிய பார்த்திபன், யூடியூப் சேனலில் கிரிப்டோ கரன்சி குறித்து நிறைய வீடியோக்கள் பார்த்துவிட்டு `கண்டிப்பாக பணம் செலுத்தினால் லாபம் பல மடங்கு கிடைக்கும்’ என்ற ஆசையில் ரூ.18 லட்சத்தை அந்தப் பெண் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு அனுப்பியிருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி பார்த்திபன் தான் பணம் செலுத்திய நிறுவனத்தின் செயலியை சோதித்தபோது செயலி முடுக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். பின்னர் லிசா பிஞ்சுக்கும் மெசேஜ் அனுப்பியதில் எந்தவித பதிலும் திருப்பி வராததால், தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்து சேலம் மாநகர சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.