சென்னையில் உள்ள சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அமுதராஜ். கடந்த மாதம் 9 ஆம் தேதி இவருடைய இருசக்கர வாகனம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமுதராஜ் சென்னை குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து வந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் அமுதராஜியின் இருசக்கர வாகனத்தை கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் வேறு ஒரு நபர் பெயருக்கு பெயர் மாற்றம் செய்துள்ளதாக அமுதராஜுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், அமுதராஜியின் இருசக்கர வாகனத்திற்குரிய அனைத்து ஆவணங்களும் அவரிடம் இருக்கும்போது திருடப்பட்ட வாகனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அமீர் அப்பாஸ் என்பவரின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, அமுதராஜ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் உத்தரவின் படி சென்னை குமரன் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அந்த விசாரணையின் போது, அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் இரண்டு பெண் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட மோட்டார் வாகனத்தின் அசல் ஆவணங்களைப் பார்க்காமல் அதன் ஜெராக்ஸ் நகல்களை மட்டும் பார்த்து பெயர் மாற்றம் செய்து கொடுத்துள்ளனர் என்பது தெரிய வந்தது.
மேலும், இந்தப் பெயர் மாற்றத்திற்கு பண்ருட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகி பரிந்துரை செய்யப்பட்டதன் அடிப்படையில் பெண் ஊழியர்கள் பெயர் மாற்றம் செய்து கொடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து பணியில் அலட்சியமாக செயல்பட்ட அந்த இரண்டு பெண் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு சென்னையில் உள்ள போக்குவரத்து கமிஷனர் அலுவலகத்திற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுதாகர் பரிந்துரை செய்துள்ளார்.