தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து படிப்படியாக மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக லேசானது முதல் பரவலான மழையை மட்டுமே பார்க்க முடிந்தது. இதேநிலை தான் சென்னையிலும் நீடித்து வருகிறது. காலை எழும் போது மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும்.
அதன்பிறகு நாள் முழுவதும் மந்தமாக காட்சியளிக்கும். இன்றும் அப்படித்தான். இந்நிலையில் அடுத்த 6 நாட்களுக்கு சென்னையின் வானிலை நிலவரம் குறித்து முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நவம்பர் ஒன்றாம் தேதி வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பரவலானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும். நவம்பர் இரண்டாம் தேதியை பொறுத்தவரை இடியுடன் கூடிய பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது.
நவம்பர் மூன்றாம் தேதி அன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நவம்பர் 4ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 5ஆம் தேதி அன்று லேசானது முதல் பரவலானது வரை மழை பெய்யக்கூடும். இதேபோல் நவம்பர் 6ஆம் தேதி அன்றும் லேசானது முதல் பரவலானது வரை மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். இதற்கிடையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒருவழியாக மேகங்கள் சென்னையின் எல்லைக்குள் வந்து சேர்ந்துவிட்டன. இன்று பகல் பொழுது மற்றும் இரவில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.
வடக்கு கடலோரப் பகுதிகளில் காணப்படும் மேகங்கள் மெல்ல நகர்ந்து செல்லும். எனவே அலுவலகத்திற்கு செல்வோரும், பணி முடிந்து வீட்டிற்கு திரும்புவோரும் கவனமாக இருக்க வேண்டும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் நாளை வரை மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாகை, காரைக்கால், கடலூர், விழுப்புரம் கடலோரப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை நல்ல மழை பெய்யக்கூடும். தெற்கு கேரளா, கன்னியாகுமரியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். மற்ற பகுதிகளில் அடுத்து வரும் நாட்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.