கொழும்பு ”இலங்கையில் மலையக தமிழர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்,” என, அந்நாட்டின் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.
நம் அண்டை நாடான இலங்கையின் மத்திய மாகாண பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்.
இவர்கள் மலையக தமிழர்கள் அல்லது மலையக தோட்ட தொழிலாளர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆண்டாண்டு காலமாக நிலம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை பெறுவதில் பல சவால்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவர்களுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்து ஏராளமான மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தப் பொருட்களை பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி கொழும்பு நகரில் நேற்று நடந்தது.
இதில் இலங்கை அதிபர்ரணில் விக்கிரமசிங்கே பேசியதாவது:
இலங்கையில் வசிக்கும்தோட்ட தொழிலாளர் பிரச்னைக்கு விரைவில் சுமுக தீர்வு காணப்படும். இங்கு வசிக்கும் மலையக தமிழர்களில் சிலர், இலங்கை மக்களுடன் ஒன்றிணைந்து விட்டனர்.
ஆனால் சிலருக்கு இன்னும் தயக்கம் உள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.
இலங்கை மக்களுடன், மலையக தமிழர்களை ஒன்றிணைப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்படும். இந்த பிரச்னைக்கு படிப்படியாக தீர்வு காணப்படும். அடுத்த சில ஆண்டுகளில் முழுமையான தீர்வு ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement