பொருளாதார நெருக்கடி சூழல் சீரானதும் ராமேஸ்வரம் கோயில் சொத்துகள் குறித்து இலங்கைக்கு சென்று ஆய்வு: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

ராமேஸ்வரம்: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி சூழல் சீரானதும், அந்நாட்டுக்குச் சென்று ராமேஸ்வரம் கோயில் சொத்துக்கள்  குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை ராமேஸ்வரம் வந்தார். ராமநாத சுவாமி கோயிலில், பக்தர்கள் தரிசனம் செய்யும் பகுதி, தீர்த்தமாடும் பகுதி மற்றும் கோயில் பிரகாரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம், அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், கோயில் துணை கமிஷனர் மாரியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர். ஆய்வை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: தற்போது இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியான சூழல் சீரானதும் இலங்கைக்கு நேரில் சென்று ராமேஸ்வரம் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளேன். இவ்வாறு கூறினார்.

* தங்க ரதம் வெள்ளோட்டம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அம்பாள் தங்க ரதம் நீண்ட நாட்களாக ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் தங்கரதம் கருமை நிறத்திற்கு மாறியது. இதனை மீண்டும் இயக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கோயில் நிர்வாகம் தங்கரதத்தை சீரமைத்ததை தொடர்ந்து நேற்று இரவில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் தங்கரதம் வெள்ளோட்டம் நடைபெற்றது. அமைச்சர் சேகர்பாபு ரதத்தினை வடம்பிடித்து துவக்கி வைத்தார். தொடர்ந்து ‘சிவ சிவா’ கோஷத்துடன் பக்தர்கள் பர்வதவர்த்தினி அம்பாள் சர்வ அலங்காரத்தில் இருந்த தங்கரதத்தை இழுத்து வந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.