பெங்களூரு, மடாதிபதியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் இளம்பெண், மற்றொரு மடாதிபதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான கல்லுாரி மாணவி மொபைல் போனில், பல பிரமுகர்களுடன் ஆபாசமாக பேசிய தகவல்கள் கிடைத்துள்ளன.
கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது.
இங்கு, ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பண்டி மடத்தின் மடாதிபதி பசவலிங்க சுவாமி, 24ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது கடிதத்தில், தற்கொலைக்கு மற்றொரு மடாதிபதி மற்றும் இளம்பெண் தான் காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல்கள்:
தற்கொலை செய்து கொண்ட மடாதிபதிக்கு போன் செய்து பேசியது, தொட்டபல்லாபூரைச் சேர்ந்த நீலாம்பிகா, 22.
இன்ஜினியரிங் கல்லுாரி மாணவியான இவருக்கு, கன்னுார் மடாதிபதி மிருத்யுஞ்ஜயாவின் அறிமுகம் கிடைத்தது. இந்த இரண்டு மடாதிபதிகளும் உறவினர்கள்.
இருவரது மடங்களும் மாகடி பகுதியில் தான் உள்ளன.
பண்டி மடாதிபதியின் புகழை கெடுத்தால், தனக்கு செல்வாக்கு அதிகரிக்கும் என கன்னுார் மடாதிபதி கணக்கு போட்டார்.
எனவே, தனக்கு அறிமுகமான நீலாம்பிகாவை, அவரிடம் ‘வீடியோ’ காலில் ஆபாசமாகவும், நிர்வாணமாகவும் பேச வைத்து, பதிவு செய்து கொண்டார்.
இந்த வீடியோவை பண்டி மடாதிபதியிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டியதால், அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து மிருத்யுஞ்ஜயா, நீலாம்பிகா, இவர்களுக்கு உதவியாக இருந்த மகாதேவய்யா ஆகிய மூவரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர்.
இதில், மாணவி நீலாம்பிகா, தற்கொலை செய்த மடாதிபதி தவிர, மேலும் பல பிரமுகர்களுக்கும் போன் செய்ததுடன், ‘வாட்ஸ் ஆப்’பில் தகவல்களையும் அனுப்பி உள்ளது தெரியவந்து உள்ளது.
இந்த விவகாரத்தில், பங்கஜா என்ற பெண்ணுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இவர் பண்டி மடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளியை நிர்வகித்து வருகிறார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்