கல்வி விகடன் யூடியூப் சேனலில் ‘Monday Motivation’ என்ற நிகழ்ச்சி மூலம் தன்னம்பிக்கை உரைகளை வழங்கிவருகிறார் திரு.நந்தகுமார் IRS. இந்த வாரத்திற்கான நிகழ்ச்சியில் தன்னை உணர்தலைப் பற்றிப் பகிர்ந்திருக்கிறார் அவர். ” நாம் நினைத்ததை போல் இருக்க வேண்டும் என்றால் நமக்குத் தன்னை உணருதல் மிகவும் அவசியம். ‘நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்’ என்ற விவேகானந்தரும் இதையே தான் கூறுகிறார். இந்த பொன்மொழி தன்னையறிதலின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
உசைன் போல்ட் தான் உலகின் அதிவேக மனிதராக மாறப்போகிறார் என்பதை தன் ஆரம்பகாலத்தில் அறிந்திருக்க மாட்டார். நாம் நம்மையே சோதனை செய்து, எந்த இடத்தை நாம் அடைய வேண்டுமோ அந்த இடத்தை எட்டுவது தான் சுய உணர்தல். அப்படி தான் உசைன் போல்ட்டும் 2008-ல் பெர்லின் ஒலிம்பிக்ஸில் 100 மீட்டர் விரைவோட்டத்தை 9.58 நொடிகளில் ஓடி உலக சாதனை புரிந்தார். இன்று வரை அந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை. அதே 100 மீட்டர் தூரத்தை ஒடிக் கடக்க அவருக்கு இதைவிட அதிகமான நொடிகள் முன்பு தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் தன்னை மேம்படுத்திக்கொள்ள தன்முனைப்போடு அவர் எடுத்த முயற்சிகளும் உழைப்பும்தான் அவரை உலக சாதனை புரிய வைத்தது. முதலில் தன்னைப் பற்றி உணர்ந்தாலே தன்னை மேம்படுத்திக்கொள்வதற்கான வழி தெரியும்.
தன்முனைப்பு கொண்டவர்களும், தான் என்னவாக வேண்டும் என்ற உந்துதலைக் கொண்டவர்களும் வாழ்வில் சாதித்திருக்கிறார்கள். அதனால் வாழ்வில் உங்களின் உயர்வான கனவை எட்டவேண்டும் என்ற உந்துதல் இருப்பது அவசியமாகிறது. வாழ்வில் உங்கள் கனவை நீங்கள் எட்டுவதற்குத் தொடர்ந்து தன் முனைப்புடன் பயணிக்க வேண்டும். அந்த தன்முனைப்புடனும் இலக்குடனும் உசைன் போல்ட் பயணித்ததால் தான் அவரால் யாரும் முறியடிக்க முடியாத சாதனையைச் செய்ய முடிந்தது. அதேபோன்ற ஒருவர் தான் செர்கய் புப்கா. கம்பம் தாண்டுதல் வீரரான அவர் பல முறை அவரின் சாதனைகளையே முறியடித்திருக்கிறார். உங்களுக்கான இலக்கை முனைப்புடன் தேடத் தொடங்கினீர்கள் என்றால் உங்களை இந்த உலகம் அடையாளம் கண்டுபிடிக்கும். இன்று நீங்கள் உங்களை உணர்ந்தால், நாளை நீங்கள் யார் என்ற அடையாளத்தை இந்த உலகம் உணரும்” என்றார்.