எடின்பர்க் : ஸ்காட்லாந்து நாட்டில் வீட்டு கதவுக்கு பிங்க் நிற பெயின்ட் அடித்த பெண்ணிற்கு ரூ.19 லட்சம் அபராதம் விதிக்க நேரிடும் என அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் நியூ டவுன் பகுதியில் வசிப்பவர் மிராண்டா டிக்சன் 48. வீட்டின் முன் கதவுக்கு கடந்த ஆண்டு பிங்க் நிற பெயின்ட் அடித்தார்.
இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் 2019-ல் தனது பெற்றோரிடம் இருந்து அந்த வீட்டை வாங்கி 2 ஆண்டுகளாக புதுப்பித்தார். சமூக ஊடக பயன்பாட்டாளர்களிடையே அந்த கதவு பிரபலமானது. இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பலரும் அந்த கதவின் முன் நின்று படம் எடுத்து செல்கின்றனர். இதனால் அவருக்கு அரசிடம் இருந்து நெருக்கடி வந்துள்ளது.
இந்த பிங்க் நிறத்திற்கு எடின்பர்க் நகராட்சி கவுன்சில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனை வெள்ளை நிறத்திற்கு மாற்ற வலியுறுத்தி உள்ளனர். இல்லையென்றால் 20 ஆயிரம் பவுண்டுகள் (ரூ.19 லட்சம்) அபராதம் கட்ட நேரிடும் என்று டிக்சனுக்கு நகராட்சி கவுன்சில் எச்சரித்துள்ளது.
அதற்கு டிக்சன் இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரிஸ்டல் நாட்டிங் ஹில் ஹர்ரோகேட் உள்ளிட்ட நகரங்களில் வீடுகள் பளிச்சென்ற நிறத்தில் பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளன. நான் எனது வீட்டுக்கு வரும்போது முன்பக்க கதவை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதற்காக நான் பெருமை கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இந்த கதவு விவகாரத்தில் வந்த புகார் தீய நோக்கம் கொண்டது. இது மிக சிறிய விசயம் என்றும் டிக்சன் கூறியுள்ளார்.
எனினும் எடின்பர்க் நகராட்சி கவுன்சில் விதிகளின்படி வீட்டின் முன்பக்க கதவுகள் மங்கலான நிறத்திலேயே இருக்க வேண்டும் என தெரிவிக்கின்றது. இதனை தொடர்ந்து அடர் சிவப்பு நிறத்தில் பெயிண்ட் அடிக்க டிக்சன் திட்டமிட்டு வருகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement