புதுடெல்லி: பண மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் எப்.ஐ.ஆரை ரத்து செய்ய முடியாது என தெரிவித்த உச்ச நீதிமன்றம் வழக்கை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனங்களில் பணி வழங்குவதாக கூறி ரூ. 3 கோடி முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளுடன் கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி ஜாமீன் வழங்கியது. அதேப்போன்று முன் ஜாமீனில் சில நிபந்தனைகளை தளர்த்தியும் உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் சலுகை வழங்கியிருந்தது.
இந்த நிலையில் தன் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்து, வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க உத்தரவிட வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தொடர்ந்த கூடுதல் மனுவானது உச்ச நீதிமன்றத்த்தில் நீதிபகள் கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில், ‘ராஜேந்திர பாலாஜி வெளி மாவட்டங்களுக்கு செல்லலாம் என்ற முந்தைய உத்தரவு தொடரும். இருப்பினும் ஜாமீனை நிபந்தனை மற்றும் எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் என்ற விவகாரத்தில் தற்போது எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஏனெனில் அதனை விரிவாக விசாரிக்க வேண்டும்’ என திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.