ஓபிஎஸ் தலைமையில் ஆட்சி: புதிய நிர்வாகிகள் உறுதிமொழி!

அதிமுக உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் புதிய வடிவம் எடுத்து வருகிறது. ஓ.பன்னீர் செல்வத்துக்கு கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஆதரவு இல்லை என கூறப்பட்ட நிலையில் புதிய நிர்வாகிகளை அறிவித்து வருகிறார்.

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் மாறி மாறி எதிர்தரப்பினரை கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்புகளை வெளியிட்டனர். ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் ஓ. பன்னீர் செல்வம் தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுகவின் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். புதிதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எம்.வி.சதீஷ் தலைமையில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் உறுதிமொழியேற்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.

அந்த உறுதி மொழியில், ”எம்ஜிஆர் தனக்கு பின்னாலும் அதிமுக நூறாண்டு காலம் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கையோடு சட்டமன்றத்தில் தீர்க்கத்தரிசனத்துடன் தெரிவித்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னால் பதவி வெறி பிடித்த சுயநல சக்திகளால் பொன்விழா கண்ட அதிமுக பிளவுபட்டு கிடக்கிறது. லட்சோப லட்சம் தொண்டர்களின் நலன் காக்க அதிமுகவின் ஒரே நம்பிக்கையாக விளங்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் நல்லாட்சியை அமைப்போம். அதற்காக அதிமுகவின் புதிய நிர்வாகிகள் அனைவரும் இரவு பகல் பாராது பாகுபாடின்றி உழைப்போம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.