சென்னை: தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் வணிக வரி, பதிவுத் துறைகளின் வருவாய் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ரூ.23,066 கோடி கூடுதலாக ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிக வரி வளாக கூட்டரங்கில், அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், வணிக வரி இணை ஆணையர்களின் பணித்திறன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வணிகவரி, பதிவுத் துறையில் அரசின் வருவாயை உயர்த்தும் வகையில் கூடுதல் கவனத்துடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வணிக வரித் துறையின் இந்தமாத வருவாய் ரூ.10,678 கோடியாகும். கடந்த ஏப்ரல் 1 முதல் அக்.31-ம் தேதி வரை, 7 மாதங்களில் வணிக வரித் துறை வருவாய் ரூ.76,839 கோடியாகும். கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடும்போது, ரூ.20,529 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
பதிவுத் துறையைப் பொருத்தவரை, அக்டோபர் மாத வருவாய் ரூ.1,131 கோடியாகும். 7 மாதங்களில் ரூ.9,727 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ரூ.2,537 கோடி அதிகமாகும் வணிக வரி, பதிவுத் துறை ஆகிய 2 துறைகளின் வருவாயையும் சேர்த்து, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ரூ.23,066 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பதிவுத் துறையைப் பொருத்தவரை, போலியாக பதியப்பட்ட பத்திரங்களைக் கண்டறியவும், தவறு செய்தவர்களை தண்டிக்கவும் முதல்வர் முயற்சியால் சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. சென்னை, திருநெல்வேலி, கோவை மாவட்டங்களில் தணிக்கை ஆய்வு நடைபெறுகிறது. அதன்பின் போலி ஆவணங்கள் பதிவு குறித்த தகவல் தெரியவரும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.