திருச்சி தெற்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அனிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்து இருக்கிறார். தன்னுடைய 12 வயது, 10 வயது மகன்களுடன் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய இரு மகன்களுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அனிதா, ‘என்னுடைய சொத்தை அபகரிப்பதற்காக என்னுடைய கணவரும், என் இரு சகோதரர்களும் சேர்ந்து கொண்டு எனக்கு தொடர்ந்து பிரச்னை கொடுத்து வருகின்றனர். மேலும், என்னை ஆபாசமாகப் படம் எடுத்து வைத்துக்கொண்டு என்னை மிரட்டி வருகின்றனர். இதை வெளியில் சொல்வதால் எனக்கு கொலை மிரட்டல் வரவும் வாய்ப்பிருக்கிறது’ என பகீர் கிளப்பும் வகையில் புகார் மனு ஒன்றினை அளித்தார்.
என்ன நடந்ததென அனிதாவிடம் பேசினோம். “என்னுடைய அப்பா வகையில் சொந்த வீடு உட்பட எனக்கு பல லட்சக்கணக்கில் சொத்துகள் இருக்கின்றன. என் கணவருடைய செயல்பாடுகள் பிடிக்காததால் அவரை டைவர்ஸ் செய்ய அப்ளை செய்திருக்கிறேன். இதற்கிடையே நான் தனியாக இருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி என்னுடைய சகோதரர்களான நந்தகுமார், சரவணன் மற்றும் என்னுடைய கணவர் மனோகர் ஆகிய மூவரும், என்னுடைய சொத்தை அபகரிக்க எனக்கு கடும் தொந்தரவு கொடுத்து வருகின்றனர். நான் தூங்கும் போது என்னுடைய முகத்தில் மயக்க மருத்தை வைத்து அழுத்தி, என் சகோதர்களும் கணவரும் சேர்ந்து என்னை ஆபாசமாகப் படம் எடுத்து வைத்துள்ளனர். அவர்களுடைய வழிக்கு நான் செல்லவில்லையென்றால், அந்த ஆபாசப் படங்களையெல்லாம் இன்டர்நெட்டில் போட்டுவிடுவதாக மிரட்டுகின்றனர். மேலும், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் என்னையும் என் குழந்தைகளையும் சேர்த்து கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருகின்றனர். மேலும், நான் இல்லாத நேரத்தில் என்னுடைய வீட்டிற்குள் நுழைந்து என்னுடைய நகை, பணம் மற்றும் லாக்கர் கீ போன்றவற்றை மூவரும் திருடிச் சென்றுள்ளனர்.
இதுசம்பந்தமாக, திருச்சி காந்தி மார்கெட் காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். புகார் கொடுக்கச் சென்ற என்னை இன்ஸ்பெக்டர் சுகுமார் தகாத வார்த்தைகளில் பேசுகிறார். ஏற்கனவே உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் நான் இதனால் கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளாகியிருக்கிறேன். என்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதோடு, என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கொலை மிரட்டல்களையும் விடுக்கின்றனர்.
இந்தப் பிரச்னை சம்பந்தமாக முதல்வர் தனிப்பிரிவு வரை புகார் அனுப்பியிருக்கிறேன். எனவே, தயவுசெய்து எனக்கு பாலியல் ரீதியாகவும், உயிருக்கு அச்சுறுத்தலைக் கொடுக்கும் வகையிலும் செயல்படும் என்னுடைய சகோதரர்கள் இருவர் மற்றும் என்னுடைய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், என்னிடமிருந்து அவர்கள் திருடிச்சென்ற நகை, பணம் போன்றவற்றை மீட்டுத்தர வேண்டும்” என்றார்.
உடன்பிறந்த சகோதரர்கள் மற்றும் கணவரே கூட்டு சேர்ந்து ஆபாச புகைப்படங்களை எடுப்பதாக பெண் கொடுத்திருக்கும் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.