ஆமதாபாத்: குஜராத்தில் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை, 141 ஆக அதிகரித்துள்ளது. விபத்து தொடர்பாக பராமரிப்பு பணி மேற்கொண்ட ‘ஒரெவா’ நிறுவனத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு ஆமதாபாதில் இருந்து, 300 கி.மீ., துாரத்தில் மோர்பி என்ற நகரம் உள்ளது.
சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தில் தர்பங்கா – நஜார்பாக் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில், மச்சூ ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், 1880ல் இரும்புக் கம்பிகளாலான தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. இது, 765 அடி நீளம் உடையது.
நேற்று முன்தினம் இரவு திடீரென இந்த பாலம் அறுந்து விழுந்தது. அப்போது பாலத்தில் 400 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை, 70க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டன; நேற்றும் மீட்பு பணிகள் முழு வீச்சில் தொடர்ந்தன.
தேசிய பேரிடர் மீட்பு படையின் ஐந்து குழுவினர், மாநில பேரிடர் மீட்பு படையின் ஆறு குழுவினர், விமானப் படையினர், ராணுவம், கடற்படையினரும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று தண்ணீருக்குள்ளும், சேறுக்குள்ளும் சிக்கியிருந்த மேலும் ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டன.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் சம்பவ இடத்தில் முகாமிட்டு, மீட்பு பணிகளை முடுக்கி விட்டார்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இதுவரை மொத்தம், 141 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்; மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன’ என்றனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மோர்பி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு ஏராளமான மக்கள் குவிந்துள்ளதால், பதற்றம் நிலவுகிறது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறியழுதது, அனைவரது மனதையும் உருக்கும் வகையில் இருந்தது.
இதற்கிடையே, விபத்து குறித்து அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கூறியதாவது:
சூரியனை வழிபடும் சாத் பூஜை நேற்று முன்தினம் குஜராத்தில் கொண்டாடப்பட்டது.
மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது. கட்டுப்பாடு இல்லாமல் பாலத்தில் அனைவரையும் அனுமதித்தனர்,
மையப் பகுதியில் இருந்த இளைஞர்கள் சிலர், பாலத்தின் கேபிள்களை பிடித்து இழுத்து தொங்கினர். இதனால் பாலம் ஆடியது.
இதைப் பார்த்து பயந்த சிலர், வேகமாக அங்கிருந்து வெளியேற முயன்றனர். அதற்குள் பாலம் அறுந்து விழுந்து விட்டது. இதில் கர்ப்பிணி ஒருவரும் உள்ளே விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இரவு நேரம் என்பதால், மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் குழந்தைகள், பெண்கள் அதிகம் இறந்து விட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து குஜராத் அதிகாரிகள் கூறியதாவது:
இது பழமையான பாலம் என்பதால் அடிக்கடி பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படும்.
இதன்படி ஏழு மாதங்களாக இந்த பாலம் மூடப்பட்டிருந்தது. பாலத்தை பராமரித்து, சீரமைக்கும் பணி, ஒரு தனியார் நிறுவனம் வசம் கொடுக்கப்பட்டிருந்தது.
ஏழு மாத சீரமைப்பு பணிகளுக்குப் பின், கடந்த மாதம் 26ல் தான், இந்த பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. பாலம் திறக்கப்பட்ட ஐந்தே நாட்களில் விபத்து ஏற்பட்டு விட்டது. விபத்து குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, விபத்து நடந்த இடத்தை பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவும், பிரதமர் மோடி இன்று மோர்பி வருகிறார்.
எம்.பி., உறவினர்கள் 12 பேர் பலி
குஜராத்தின் ராஜ்கோட் எம்.பி.,யான, பா.ஜ.,வைச் சேர்ந்த மோகன் குந்தாரியா கூறியதாவது:ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், என் உறவினர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மோர்பி பாலத்துக்கு சுற்றுலா சென்றிருந்தனர். இவர்களில், 12 பேர் பலியாகி விட்டனர். இறந்தவர்களில் ஐந்து பேர் குழந்தைகள். தகவல் கிடைத்த அடுத்த அரை மணி நேரத்தில் சம்பவ இடத்துக்கு வந்து விட்டேன்; இங்கேயே தங்கியுள்ளேன். தண்ணீருக்குள் இருந்து ஒவ்வொரு உடலாக எடுக்கும் போது, அதை பார்க்க முடியவில்லை. கதறி அழுவதை தவிர என்ன செய்வது என தெரியவில்லை. தவறுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தனியார் நிறுவனம் மீது குற்றச்சாட்டு
விபத்து குறித்து குஜராத் போலீசார் கூறியதாவது:தொங்கு பாலத்தின் பராமரிப்பு பணி, ‘ஒரெவா’ என்ற தனியார் நிறுவனத்துக்கு தரப்பட்டிருந்தது. இது தொடர்பாக அந்த நிறுவனத்துக்கும், மோர்பி நகராட்சிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.இந்த ஒப்பந்தத்தில், ‘எட்டு முதல், 12 மாதங்கள் வரை பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். 2037 வரை ஒரெவா நிறுவனமே இந்த பாலத்தை பராமரித்து, சுற்றுலா பயணியரிடம் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிறுவனம் ஏழு மாதங்களிலேயே பணியை முடித்து, பார்வையாளர்களை அனுமதித்து விட்டது. இதற்கு மோர்பி நகராட்சியிடம் தடையில்லா சான்றிதழ் எதுவும் பெறவில்லை. இந்நிலையில் இந்த நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், டிக்கெட் விற்பனை செய்தவர்கள், காவலாளிகள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்