'65 ரூபாதான் கட்டுவேன் ஆனா 91 ஆயிரம் வந்திருக்கு' – பெண்ணுக்கு 'ஷாக்' கொடுத்த மின்கட்டணம்

நெல்லையில் அரசு மானியத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கு மின்சார கட்டணம் ரூ.91 ஆயிரத்து 130 என மெசேஜ் வந்ததால் அவர் அதிர்ந்துபோனார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த துலுக்கர்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது பாத்து (40). இவர் தனது தந்தை உதுமான் கனியுடன் அரசு மானியத்தில் கட்டப்பட்ட பசுமை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மின்வாரியத்தில் இருந்து அவரது மொபைலுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் இரு மாதத்திற்கான மின்கட்டண தொகையாக 91 ஆயிரத்து 130 ரூபாய் வந்துள்ளதாகவும் மின் கட்டணம் கட்டுவதற்கு கடைசி நாள் வரும் நவம்பர் 5 ஆம் தேதி என குறிப்பிடப்பட்டிருந்தது.
image
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த முகமது பாத்து, நாங்குநேரி மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று விளக்கம் கேட்டுள்ளார். வழக்கமாக எனது வீட்டிற்கு இரு மாதங்களுக்கு ரூபாய் 65 மட்டுமே கட்டியுள்ளேன். இந்த மாதம் மட்டும் எப்படி அதிகமாக வந்துள்ளது? வீட்டில் இரண்டு அறைகள் மட்டும் தான் உள்ளது. வீட்டில் இருப்பது மொத்தமே இரண்டு பேர்தான் பல்புகள் இரண்டும் தான் எரியும் எப்படி 91 ஆயிரம் வந்தது என புலம்பித் தீர்த்துள்ளார்.
image
இதனை அடுத்து மின்வாரிய ஊழியர்கள் தொழில்நுட்ப கேளாறு காரணமாக தவறு ஏற்பட்டிருக்கலாம்.இரண்டு நாளில் உண்மையான கட்டண ரசீது வந்துவிடும் அதுவரை பதற்றமடைய வேண்டாம் எனக் கூறி சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். அரசு மானியத்துடன் கட்டப்பட்ட வீட்டில் தந்தையும் மகளும் மட்டுமே வாழ்ந்து வரும் சூழலில் இரண்டு மாத மின் கட்டணமாக 91 ஆயிரத்து 130 ரூபாய் வந்துள்ளது அப்பகுதி தெருவாசிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.