நாட்டில் தீர்மானம் மேற்கொள்வதற்கு இளைஞர்களுக்கு அதிக சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும் எனும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் கொள்கையை வலுப்படுத்தும் வகையிலான தனிநபர் பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொவத்த முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தும் விசேட சந்திப்பு நேற்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
262ஆவது உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அதிகார கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்காக இந்த தனி நபர் பிரேரணை சட்டமூலமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
இச்சட்டமூலத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முதலாவது மற்றும் இரண்டாவது வேட்புமனுப் பட்டியல்களில், குறைந்தது 25% இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இங்கு தெரிவித்தார்.
இளைஞர்களின் அமைதியின்மையைக் கண்டறிவதற்காக 1990 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய, ஜனநாயகப் பிரதிநிதித்துவ முறைமைகளில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதன் முக்கியத்துவம் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதற்கமைய 1990 ஆம் ஆண்டில், உள்ளூராட்சி மன்ற சட்டத்தில் திருத்தம் ஒன்றைச் செய்ததன் மூலம், அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் உள்ளூராட்சி வேட்புமனுப் பட்டியல்களைத் தயாரிக்கும்போது 40% வாய்ப்புகளை இளைஞர்களுக்கு உறுதிப்படுத்தும் விதிகளை அறிமுகப்படுத்தியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் 25 சதவீத பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், அது தொடர்பான திருத்தத்தில் இளைஞர் பிரதிநிதித்துவம் கட்டாயம் என்ற நிபந்தனை வலுவிழக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த சுட்டிக்காட்டினார்.
அந்த வாய்ப்பை இளைஞர் சமூகத்திற்கு மீண்டும் வழங்குவதன் மூலம் இளைஞர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தவும் தனது முன்மொழிவு உதவும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த தனிநபர் பிரேரணையாக முன்வைத்துள்ள, “262 ஆவது உள்ளூராட்சி மன்ற தேர்தல் அதிகார கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம்” 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
PMD