கழிவுநீர் குழாய்கள் தூர்வாரும் பணி: சென்னையில் இன்று தொடக்கம்!

வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னையில் மழை நேற்று முதல் கொட்டித் தீர்த்து வருகிறது.

மழைநீர் வடிகால் பணிகள் சில இடங்களில் நிறைவடையாத போதும் பல இடங்களில் பணிகள் நிறைவடைந்ததால் பெரியளவில் மழை நீர் தேங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

இதுஒருபுறமிருக்க கழிவுநீர் குழாய்களை தூர்வாரும் பணிகள் நடபெறுவதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

சென்னையில் 2,106 தெருக்களில் உள்ள கழிவுநீர் குழாய்களில் தூர்வாரும் பணி இன்று தொடங்கி நவம்பர் 15ஆம் தேதி வரைநடைபெற உள்ளது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு வாரியம் சார்பில் சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் களப் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் நிலையில், மண்டலத்துக்கு ஒருவர் வீதம் 15 மண்டலங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அனைத்து மண்டலங்களிலும் உள்ள கழிவுநீர் செல்லும் குழாய்களில் தூர்வாரும் பணிகள் இன்று(நவம்பர் 1) தொடங்கப்படுகிறது. இப்பணிகள் வரும் 15-ம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 2,106 தெருக்களில் உள்ள 11,260 இயந்திர நுழைவு வாயில்கள் வழியாக கசடுகள் அகற்றப்பட உள்ளன. இப்பணியில் 282 தூர்வாரும் இயந்திரங்கள், 162 ஜெட்ராடிங் இயந்திரங்கள், 57 கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.