இஸ்லமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேரணி வாகனத்தில் பெண் பத்திரிக்கையாளர் சிக்கி உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் சதாஃப் நயிம் இம்ரான் கானை நேர்காணல் செய்வதற்காக அவரது பேரணி வாகனத்தில் ஏறி இருக்கிறார். அப்போது தவறுதலாக சக்கரத்தில் சிக்கி சதாஃப் நயிம் உயிரிழந்தார். பாகிஸ்தானில் புதிய பொது தேர்தலை அறிவிக்க வேண்டி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேரணி நடத்தி வருகிறார். இந்த நிலையில்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பெண் பத்திரிகையாளர் மரணத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள இம்ரான் கான் தன் பேரணியை தற்காலிகமாக ஒரு நாள் மட்டு ரத்து செய்தார்.
இதுகுறித்து இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “ சானல் 5 பத்திரிகையாளர் மரணத்தை அறிந்து ஆழ்ந்த வருத்தம் கொள்கிறேன். எனது வருத்தத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. மறைந்த பத்திரிகையாளர் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இந்தநிலையில் பெண் பத்திரிகையாளர் மரணத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இம்ரான் கான் கடந்த ஒருவாரமாக பாகிஸ்தானில் தேர்தல் வேண்டி பேரணிகளை நடத்தி வருகிறார். அவரைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் முக்கிய சாலைகளில் திரண்டு வருகின்றனர். முன்னதாக, நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் தோல்வியடைந்து தனது பிரதமர் பதவியை இழந்தார் இம்ரான் கான். இதனைத் தொடர்ந்து,பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.