கோவை: “வடகிழக்குப் பருவமழைக்காக மின்வாரியத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மின்வாரிய தலைமையகத்தில் ஆய்வு செய்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
கோவையில் உள்ளாட்சி தினத்தையொட்டி மாநகராட்சி, நகராட்சி சபை கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “வடகிழக்குப் பருவமழையையொட்டி தமிழக முதல்வர் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு, ஒவ்வொரு துறைகளுக்கும் முதல்வர் உத்தரவுகளை வழங்கியுள்ளார்.
மின்வாரியத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மின்வாரிய தலைமையகத்தில் ஆய்வு செய்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒன்றரை லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, 24 மணி நேரமும் அவர்கள் பணியாற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மின்வாரியத்தைப் பொருத்தவரை, வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன” என்று அவர் கூறினார்.