நீலகிரி மாவட்டவத்தைச் சேர்ந்தவர் திராவிடமணி. 54 வயதான இவர், 9, 12 வயதுடைய இரண்டு சிறுவர்களிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த 2019-ம் ஆண்டு அவரது தோட்டத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இரண்டு சிறுவர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் திராவிடமணியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
தீர்ப்பு குறித்து நம்மிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் செந்தில், “கடந்த 2019 ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி 9 வயது மற்றும் 12 வயதுள்ள இரண்டு சிறுவர்களுக்கு இலவச லேப்டாப் தருவதாக கூறி தனது பாக்கு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் திராவிடமணி. சிறுவர்கள் இருவரிடமும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய திராவிடமணிக்கு போக்சோ சட்டத்தின் 9-வது பிரிவின் படி 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், போக்சோ சட்டம் பிரிவு 7 மற்றும் 8ன் கீழ் 3 ஆண்டுகள் தண்டனை மற்றும் ரூ.3000 அபராதமும் விதித்து நீதிபதி நாராயணன் தீர்ப்பளித்தார். சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்” என்றார்.