பேசாம ராஜினாமா பண்ணிடுங்க சி.எம்… குஜராத் துயரமும், கெஜ்ரிவால் அட்டாக்கும்!

குஜராத் மாநிலம் மோர்பியில் வரலாற்று சிறப்புமிக்க தொங்கும் பாலம் உடைந்து விபத்தில் சிக்கியது, ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 134 பேர் பலியாகியுள்ளனர். இதுதொடர்பான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் மோர்பி பாலம் விபத்து பற்றி பேசியுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஊழலின் விளைவால் தான் இப்படியொரு பெரும் விபத்து ஏற்பட்டிருக்கிறது. கடிகாரம் செய்யும் ஒரு நிறுவனத்திடம் பாலம் சீரமைக்கும் பணிகளை ஏன் ஒப்படைத்தனர்? ஏனெனில் அந்த நிறுவனம் பாஜக உடன் நெருக்கம் காட்டி வந்துள்ளது. விபத்து தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அதில் தனியார் நிறுவனத்தின் பெயரோ அல்லது அதன் உரிமையாளர்கள் பெயரோ இடம்பெறவில்லை. இதன் பின்னணியிலும் சில விஷயங்கள் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து மிகப்பெரிய நன்கொடையை பாஜக பெற்றுள்ளது. இவையெல்லாம் விசாரிக்கப்பட்டு உண்மையை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் பேசுகையில், மோர்பி பால விபத்தில் காயமடைந்த நபர்களை பார்க்க பிரதமர் மோடி வருகிறார் என்பதற்காக அந்த மருத்துவமனையை அழகுபடுத்தும், தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. எத்தனை பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இங்கே அழகுபடுத்தும் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர். இப்படி பொறுப்பற்ற முறையில் செயல்படக்கூடிய முதல்வர் எதற்காக? அவர் அந்த பதவியில் தொடரக் கூடாது.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தனது ராஜினாமா செய்துவிட்டு உடனடியாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். குஜராத் மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதில் ஆளுங்கட்சியான பாஜக மீண்டும் வெற்றி பெற தீவிரம் காட்டி வரும் சூழலில், ஆட்சியை கைப்பற்ற
காங்கிரஸ்
வியூகம் வகுத்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் மும்முனை போட்டியை ஏற்படுத்த ஆம் ஆத்மி கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. பாஜக கோட்டையில் ஆம் ஆத்மி தடம் பதிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தான், குஜராத் முதல்வரை வம்புக்கு இழுக்கும் வகையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.