வாழ்க்கைப் பாதை! | சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

திடீரென வாடிக்கையாளர் பக்கத்திலிருந்து சப்தம்வர வரதராஜன் நிமிர்ந்தார். ராமலிங்கம் செக்சனுக்கு எதிரிலிருந்து இரண்டொருவர் வாக்குவாதம் செய்வதைப் பார்த்து சோர்ந்து போனார்.

மானேஜராக புரமோஷனாகி இந்த கிளைக்கு மாறுதல் கிடைத்தது மகிழ்ச்சியளித்தாலும், தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை முழுமையாக முடிக்காமல் சென்றுவிடும் ராமலிங்கத்தின் பொறுப்பற்ற செயலால் அவ்வப்போது டென்ஷன் ஏறி மகிழ்ச்சி காணாமல் போவதுண்டு. பத்துபேர் வேலைபார்க்கும் இந்த கிளையில் அவர் மட்டும் திருஷ்டி பரிகாரமாக அமைந்துவிட்டார். இத்தனைக்கும் ஆள் கொஞ்சம் நஞ்சம் படிக்கவில்லை. ஏகப்பட்ட பட்டங்கள்பெற்று வங்கித்தேர்வு எழுதி வேலைக்கு வந்தவர். இந்த வேலையின் அனைத்து நுணுக்கங்களையும் கரைத்துக் குடித்தவர். ஆனால் வேகம் இல்லை. கொடுத்த வேலையை முழுமையாக செய்வதில்லை. மறுநாள் வேறு யாராவது செய்யும் நிலையை உருவாக்கி அவரது முணுமுணுப்புக்கு ஆளாகுபவர். அவ்வப்போது மொபைல் போனை எடுத்துக் கொண்டு நோண்டிக் கொண்டிருப்பார். இதனால் பாதிபேர் அவரோடு பேசமாட்டார்கள்.

இப்படியொரு இடைவெளி இருந்தாலும் சந்தேகம் வந்துவிட்டால் தெளிவுபடுத்திக் கொள்ள அவரையே நாடுவர். அன்றைய நாளில் சண்டைப்போட்டவர்களும் அடுத்தவர் மூலமாக தூதுவிடுவர். ராமலிங்கம் நடந்ததை பெரிதுபடுத்தாமல் சந்தேகத்தையும் தீர்த்து வைப்பார். அதுபோல சண்டை போடுபவரிடமும் வன்மம் கொள்வதில்லை. அவர் இயல்பு அப்படி.

ஆனால் நாளுக்கொரு மாற்றத்தை எதிர்கொண்டிருக்கும் வங்கிச்சேவைக்கு ராமலிங்கத்தின் வேகம் போதாது. மானுவல் சிஸ்டம் போய் கம்ப்யூட்டர் சிஸ்டம் வந்து அதிலும் பற்பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னரும் வேலை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. வங்கி உத்யோகம், மாதம் ஒரு பெருந்தொகையை சம்பளமாக பெற்றுத்தரும் ஜாலி உத்யோகம் என்பதுமாறி சிரமங்களும் சிக்கல்களும் கொண்டதாகிவிட்டது.

கண்ணாடியை கழற்றியவாறு நாற்காலியிலிருந்து எழுந்து ராமலிங்கம் சீட்டுக்குச் சென்றார்.

என்னாச்சுங்க ராமலிங்கம்?

பிரிண்டர் பிராப்ளம், பிரிண்ட் வரலை, இவரு நாலு தடவையா திருப்பி விடறீங்களேன்னு கத்தறார்.

அப்பாடி இன்றைக்கு ராமலிங்கம் பக்கத்தில் பிரச்சனை இல்லாதது ஆச்சிரியம்தான்.

Representational Image

வரதராஜன் பியூன் ஜெயகுமாரை அழைத்தார்.

முந்தாநாளே கம்ப்ளெயிண்ட் பண்ணினிதா சொன்னே என்னாச்சு?

அரைமணி நேரத்துக்கு முன்னாலேயும் போன் பண்ணினேன் உடனே வரறேன்னாரு இன்னும் வரலே.

மறுபடியம் பேசு. வரலேன்னா வேற ஆள் பார்க்கட்டுமான்னு கேளு. ஸார் நீங்க பாஸ்புத்தகத்தைக் கொடுத்துட்டுப் போங்க நான் பிரிண்ட் எடுத்து வச்சிட்டு போன்பண்றேன்

வங்கி உத்யோகம் மற்றவர் பார்வையில் மதிப்பான விஷயம். அவரவர் நிலையில் அல்லல். அதற்காக மற்றவர் முன் பலவீனப்பட்டு நிற்கக்கூடாது.

சற்று நேரத்தில் மெக்கானிக் வர கடிந்து கொண்டார். அவன் ஸாரி சொல்லியவாறு பழுது நீக்கித்தர முதற் பணியாக சப்தம் போட்ட வாடிக்கையாளரின் ஸ்டேட்மெண்டை பிரிண்ட் எடுக்கச் சொன்னார்.

மணி 2.30 அனைவரும் சாப்பிட்டுவிட்டு வந்து பணியைத் தொடர வரதராஜன் சாப்பிடச் சென்றார். லெட்சுமிகபே சாப்பாடு இன்றைக்கு ருசியாய் இருந்தது. வங்கி உத்யோகத்திற்கு வந்து பதினான்கு வருடங்களாகிவிட்டது. இது ஆறாவது கிளை. மூன்றாவது புரமோஷன். இங்கிருந்து என்பத்தெட்டு கிலோமீட்டருக்கு அப்பால் சொந்த ஊர். இளம் வயதிலேயே கணவனை இழந்து வாழ்க்கை பூராவும் போராடிய அம்மாவை கண்ணும் கருத்துமாக வைத்து காக்க வேண்டும் என்பதற்காக, குறைந்த படிப்பறிவைக் கொண்ட, கிராமத்திலேயே வளர்ந்த தாய்மாமனின் மகளை கரம் பிடித்தும் அந்த எண்ணம் ஈடேறாமல் போனது. ஆசை யாரையும் விடாது என்பதற்கேற்ப நகர நாகரீகத்திற்கும் மோகத்திற்கும் ஆசைப்பட்டு அவள்பெட்டி படுக்கையுடன் கூடவே புறப்பட்டுவிட அம்மா பாடு திண்டாட்டமாகியது. வேறு வழியின்றி பிள்ளை இருக்கும் நகரத்துக்கு இல்லையில்லை நரகத்துக்கு வந்தாள். ஆறுமாதகாலம் இருந்துவிட்டு ஒருநாள் சொந்த ஊருக்கே போய்விட்டாள்.

“முடியலேடா தம்பி, இங்கே இருக்கமுடியாதது ஒருபக்கம்னா இவ அமைதியா இருக்க விடமாட்டேங்கறா. இது உங்க சொந்த இடமில்லே, வந்த இடம் இங்கே இப்படித்தான் இருக்கணும் கண்டிஷன் போடறா, ராத்திரி ஆனா திண்ணையிலே படுக்கச் சொல்றா. உங்க துணியெல்லாம் எங்க துணியோட கலக்காம வெளியிலேயே போட்டுக்கங்கறா. இதையெல்லாம் உன்கிட்டே சொன்னா உங்க ரெண்டுபேருக்கும் இடையே சண்டை வந்துரும்னு சொல்லலே. என்னைக்கு வெளியே வந்து படுத்தேனோ அன்னையிலேயிருந்து இது நம்மவீடு இல்லேயோ நம்மவீடு இல்லேயோங்கற நினைப்பு ஏற்பட்டு தூக்கம் போய் ஏக்கம் ஏற்பட்டுச்சு. ஒருகட்டத்துக்கு மேலே இங்கே இருக்கமுடியாதுன்னு தோணினபிறகே ஊருக்கு புறப்பட்டு வந்தேன். இங்கே உன்னைவிட்டு இருக்கறது கஷ்டமா இருந்தாலும் அங்கே வெளியே கிடந்து தவிச்சிமாதிரி இல்லே.

உன் சின்னம்மா என் தங்கச்சிங்கறதாலே எனக்கு எந்த குறையும் வைக்கலே. நான் இங்கேயே காலத்தை ஒட்டிடறேன். மனிதர்களுக்கு இடையேயான உறவுகள் ரத்தசம்பந்தம் உறவுசம்பந்தம் உணர்வுசம்பந்தம்ங்கற மூணு நிலையாலே ஏற்படறது. இதிலே அங்கீகரிப்பைப் போல நிராகரிப்பும் எப்பவும் ஏற்படலாம்ங்கறதுதான் உண்மை. . நீ போய் அவளோட சண்டை போடாம சந்தோஷமா இரு.  

பேசிக்கொண்டிருக்கும் போதே சித்தப்பா வந்தார்

டேய் அம்மாவைப் பத்தி நீ கவலைப்பட வேண்டாம், எப்ப வந்து பாக்க முடியுதோ அப்பப்பாரு. நானும் என் பொண்டாட்டியும் உயிரோட இருக்கிறவரையில் அவுங்களுக்கு எந்த குறையும் வைக்க மாட்டோம். அவுங்களை நான் பார்த்துக்கறேன் நீ போய் உன் வேலையைப்பாரு 

அம்மாவின் நினைவு மனதை கனக்கவைக்க சாப்பிடுவதை நிறுத்தினார். அதைப்பார்த்த ஜெயகுமார் ஓடிவந்தான்

ஏன் ஸார் எதுவும் பிடிக்கலியா?

இல்லேப்பா எல்லாமும் நல்லாயிருக்கு அம்மா நினைப்பு வந்துச்சு அதான்.

எத்தனை வயசானாலும் அம்மா அம்மாதான். அம்மாவுக்கு நாம எப்பவும் குழந்தைங்கதான் ஸார்

சரியா சொன்னே. இன்னொரு விஷயம்பா நம்ம புருஷோத்தமன் வீட்டு மஞ்சள் நீராட்டுவிழா இன்னைக்குத்தானே?

ஆமாம் ஸார் 

போகணுமா

நிச்சயமா போகணும்,  நம்ம பேங்காலதான் உயர்ந்தேன்னு ஊரு பூரா சொல்லிட்டிருக்கார் நாம போகலேன்னா எப்படி

உங்க புரோக்கிராம் எப்படி?  

ஆறுமணிக்கு இங்கிருந்தே போகலாம்னு இருக்கோம். 

ஓகே நானும் வரேன்

மாலை விழா களை கட்டிக் கொண்டிருந்தது.

ஒரே கலரில் பட்டுபுடவை கட்டிய அறுபது பெண்கள் தாம்பாளத்தில் சீர்வரிசைக் கொண்டு வந்தது பிரமிப்பை அளித்தது.  பெரிய அளவுக்கு நடந்த வாணவேடிக்கையால்  சாலையெங்கும் பரவிய புகை பலருக்கு பகையானது. செண்டை மேளம் அடிப்பதை பார்க்க கூடிய கூட்டத்தால் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இல்லவிழாக்கள் ஆடம்பரமாகிவிட்டன. ஒருவரை பார்த்து மற்றொருவர் என செலவுகளை கூட்டிக் கொண்டேச் செல்கின்றனர். இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. கௌரவம் என்ற பெயரில் இவ்வளவு செலவு செய்பவர்கள் அதில் சிறுபகுதியை ஏழை எளியோருக்கோ அல்லது அனாதைகளுக்கோ தரலாமே.

மண்டபத்துள் கூட்டம் பிதுங்கி வழிந்ததால் உள்ளேச் செல்ல சிரமப்பட்டார்கள்.

Representational Image

இவர்களைப் பார்த்து புருஷோத்தமன் ஓடிவந்தார். வணக்கம் தெரிவித்து அவர் கையைப்பற்றி மேடைக்குச் அழைத்துச் சென்று அட்சதை இருந்த தாம்பாளத்தை எடுத்து நீட்டி ஆசிர்வதிக்க வேண்டினார். இதை எதிர்பாராத வரதராஜன் தாம்பாளத்தை வாங்கி மற்றவர்களிடம் நீட்ட அனைவரும் அட்சதையை எடுத்துக் கொண்டதுடன் ஒரே நேரத்தில் அட்சதையை தூவி ஆசிர்வதித்தனர். அனைவரும் அன்பளிப்பு கவர்களை அதே தாம்பாளத்தில் வைத்து புருஷோத்தமனிடம் நீட்ட. அதை வாங்கி கொண்டு டைனிங் ஹாலுக்கு அனுப்பிவைத்தார். சாப்பிட்டு முடித்து வெளியே வந்தவர்கள் அவரவர் வாகனங்களில் ஏறி பறக்க ஜெயக்குமார் தன் வண்டியில் அமரச் சொன்னான்.

ஸார் உட்காருங்க உங்களை ரூமில் விட்டுட்டு நான் ராமலிங்கம் ஸார் வீட்டுவரைக்கும் போகணும்.

அவன் சொன்ன பிறகுதான் ராமலிங்கம் பங்ஷனுக்கு வராதது நினைவுக்கு வந்தது. பேங்க் வேலையிலதான் அப்படி என்றால் பொது விஷயத்திலும் அப்படித்தானோ?. அறைக்குப் போய் நேரத்தை போக்கமுடியாமல் உட்கார்ந்திருப்பதைவிட இவன் கூடவே ராமலிங்கம் வீட்டிற்குச் சென்று வாய்ப்புக் கிடைத்தால் வேலையில் காட்டும் அசட்டுத்தனத்தைக் கூறலாம். என்று நினைத்தவர் நானும் வரலாமா என்றார்.

ஒரு கணம் தயங்கியவன் பின் தலையாட்டினான்.

ஐந்துநிமிடத்தில் ராமலிங்கம் வீட்டினுள் அவர்கள் நுழைய மானேஜரை சற்றும் எதிர்பாரத்திராத ராமலிங்கம் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். வங்கியில் இருக்கும் ராமலிங்கத்திற்கும் வீட்டில் இருந்த ராமலிங்கத்திற்கும் வித்தியாசம் இருப்பதை உணர்ந்து வியந்தார்.

ஒருவேளை இவருக்கு வங்கி வேலையில் பிடித்தமில்லையோ?

ஸார் வாங்க உங்களை நான் எதிர்பார்க்கவேயில்லை. நீங்க என் வீட்டுக்கு வந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. என்ன சாப்பிடிறீங்க.

எனக்கு எதுவும் வேண்டாம். இப்பத்தான் எல்லோரும் புருஷோத்தமன் வீட்டு பங்கஷன்லே சாப்பிட்டு வரோம். வீட்டிலே நீங்க மட்டும்தான் இருக்கீங்களா?

தாத்தா பாட்டி இருக்காங்க.

அப்பா அம்மா?

இல்லே இறந்துட்டாங்க.

மனைவி குழைந்தங்க?

மனைவியும் ஒரு பெண்ணும் சென்னையிலே தங்கியிருக்காங்க. முதன்முதலா என் வீட்டுக்கு வந்திருக்கீங்க. கொஞ்சமா கூல்டிரிங்ஸோ இல்லேன்னா காபியோ சாப்பிடலாம் ஸார்

வேண்டாம் ராமலிங்கம்.

ஆனால் அவன் கேட்கவில்லை காபி வாங்க புறப்பட, அதைப்பார்த்த ஜெயகுமார் தான் வாங்கி வருவதாக சொல்ல ராமலிங்கம் மறுத்தான்.

வேண்டாம் ஜெயகுமார் இப்போ நீ என் வீட்டுக்கு வந்திருக்கிற கெஸ்ட் நீ ஸார்கிட்டே பேசிட்டிரு. ஐந்து நிமிஷத்திலே வந்திடறேன்.

ராமலிங்கம் வெளியேற வரதராஜன் ஜெயகுமாரிடம் பேச்சுக் கொடுத்தார்.

எங்கே அவுங்க தாத்தா பாட்டி

அடுத்த ருமிலே இருக்காங்க வாங்க பார்க்கலாம்.

சற்று தள்ளியிருந்த மற்றொரு அறையை திறக்க உள்ளிருந்து குரல் கேட்டது.

என்ன ராமு, எங்களுக்கு எதுவும் வேண்டாம் நீ போய் சாப்பிடு.

தாத்தா நான் ராமு இல்லே ஜெயகுமார் வந்திருக்கேன்.

வாப்பா வந்த பல நாள் ஆச்சு நல்லாயிருக்கியா சம்சாரம் புள்ளைங்க நல்லா இருக்காங்களா?.

நல்லாயிருக்காங்க தாத்தா

எதாச்சும் வேணுமா தாத்தா?

எதுவும் வேண்டாம், எம்பேரன் எங்களுக்கு தேவையானதை நாங்களே செஞ்சுக்கற மாதிரி எல்லாத்தையும் கிட்டதானே வச்சிருக்கான். போதாக்குறைக்கு அப்பப்போ காமிராவை ஆன் பண்ணி பார்த்துட்டு மைக்ல சொல்லிகிட்டிருக்கான். அப்புறம் எங்களுக்கு என்ன குறைச்சல்! அதுசரி ஸார் யாருன்னு சொல்லலியே?

`நம்ம பிராஞ்ச் மேனேஜர்’

Representational Image

மானேஜரா என்ன புள்ளைப்பா நீ வந்ததும் சொல்றதில்லையா உட்காருங்க தம்பி ராமு எங்கேப்பா? ஸார் வந்திருக்கிறது அவனுக்குத் தெரியுமா?

தெரியும் தாத்தா காபி வாங்கிட்டு வரேன்னு போயிருக்கார்.

தம்பி என்பேரு ராதாகிருஷ்ணன். ஜமீன் ராதாகிருஷ்ணன்னு சொல்வாங்க. இது என் மனைவி பிரபாவதி. ராமலிங்கம் என் மகன்வழி பேரன். எனக்கு ஒரேயொரு மகன் இருந்தான். அவன்பேரு சீதாபதி. பேருக்கும் அவனுக்கும் சம்பந்தமேயில்லை. எல்லா கெட்டபழக்கமும் உண்டு. கல்யாணம் பண்ணினா திருந்துவான்னு நினைச்சு ஒரு பொண்ணை அவனுக்கு கட்டிவெச்சேன். திருந்தலே. குடி கும்மாளம்ன்னு பூர்வீக சொத்தான நூறு ஏக்கரையும் வித்து காலி பண்ணிட்டுதான் உட்கார்ந்தான். என்மகன் என்னை பண்ணாத சித்தரைவதையில்லே. என் மனைவியை அதாவது தன்னோட தாயை ரூமுக்குள்ளே அடைச்சு வச்சிட்டு இரண்டுலட்சம் தந்தாதான் விடுவேன்னு மிரட்டுவான். வேறு வழியில்லாம கொடுப்போம். கொடுத்து கொடுத்து அழிஞ்சோம். இன்னைக்கு என் பேரன்தான் என்னை கவனிச்சுக்கிறான். இந்த வீட்டை வாங்கி எங்களை தங்கவெச்சு சிசுருஷை பண்ணிட்டுகிட்டிருக்கான். எங்களை முதியோர் இல்லத்திலே சேர்த்திட்டு வான்னு சொன்ன மனைவி பேச்சை இவன் கேட்க மாட்டேன்னுட்டான். அவுங்க கடைசி காலம் வரையில் என்னோடத்தான் இருப்பாங்கன்னு சொன்னதாலே அவன் மனைவி அவன்கிட்டே சண்டை போட்டுகிட்டு விவாகரத்து வாங்கி்ட்டு போயிட்டா அவளுக்கு பத்துலட்சம் மகளுக்கு இருபதுலட்சம்னு கொடுத்துட்டு எங்களுக்காக தன்னை கரைச்சிக்கிட்டிருக்கான்

சொல்லிவிட்டு சற்று நேரம் அமைதி காத்தவர் மீண்டும் தொடர்ந்தார்.

எங்களை சீக்கிரம் ஆண்டவன் கொண்டு போகமாட்டேங்கறான். எங்களை கொண்டு போனா இவன் போய் மகளோட வாழ்ந்தாலும் வாழட்டும். இல்லே வேரொருத்தியை திருமணம் செஞ்சுகிட்டு வாழ்ந்தாலும் வாழட்டும்னு நினைக்கிறோம். கடவுள் கண் திறக்கவேயில்லை. எங்க நினைப்பாலே அவன் தன்னையே மறந்துட்டான். நல்ல உடை உடுத்திக்க மாட்டான். நல்ல சாப்பாடு சாப்பிட மாட்டான். அடிக்கடி செல்போனை எடுத்து எங்களை கண்காணிச்சிகிட்டே இரு்ப்பான். பாவம்பா அவன் சின்ன வயசிலே ராஜாமாதிரி வாழ்ந்தான். இப்போ அவஸ்தைப்படறான். நாள் பூரா பேங்க் வேலை வீட்டுக்கு வந்தா சமையல் வேலை. ஒரு சமையற்காரி வருவா கூடமாட இருந்து இவனும் சமைப்பான் எங்களுக்கு இதுவேணும் அதுவேணும்னு கேட்கிற அளவுக்கு அவன் எந்த குறையும் வைக்கலே. அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா அவனுக்கு மகனா பிறந்து அவன் செஞ்ததுக்கெல்லாம் பிரிதியுபகாரம் பண்ணனும்பா.

சொல்லி முடித்து கண்களை துடைத்துக்கொள்ள வரதராஜன் கணத்துப் போனார்.

ராமலிங்கத்தின் பின்னால் இத்தனை பிரச்சனைகளா? ஒரு ஜமீன் வீட்டுப் பிள்ளையாய் பிறந்தும் அந்த சந்தோஷத்தை அனுபவிக்கமுடியாமல் கசப்பான வாழ்வைதான் ராமலிங்கம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறாரா? அத்தனையையும் தாங்கிக் கொண்டுதான் அனுதினமும் வேலைக்கு வருகிறாரா? இத்தனை நாளாய் அவர்மீதிருந்த கோபம் ஓடி மறைந்து. தீடீரென ஒரு பரிவு ஏற்பட்டது

இந்த நேரத்தில் உள்ளே வந்த ராமலிங்கம் இருவரும் தாத்தாவுடன் இருப்பதை பார்த்தார்

தாத்தா இவுங்கதான் பிராஞ்ச மேனேஜர்

ஸார்கிட்டே நான் பேசிட்டேன் ராமலிங்கம்.

அப்ப ஹால்ல போய் உட்காரலாமா ஸார்

என் இங்கிருந்து விரட்டிறீங்க.

இல்லே ஒரு மாதிரியான ஸமெல் வரும் அதான் ஸார்.

நானும் மனுஷன்தான் ராமலிங்கம். எனக்கும் வயசான ஒரு அம்மா இருக்காங்க. காபியை இங்கேயே கொடுங்க குடிக்கறேன் ஆனா கொஞ்சமா கொடுங்க.

காபி வாங்கியவர் எழுந்துச் சென்று தாத்தாவின் அருகில் குடிக்கச் சொன்னார்

ஸார் தாத்தாவுக்கு நான் கொடுக்கறேன் நீங்க குடிங்க

தாத்தா குடிக்கட்டும் அப்புறம் நான் குடிக்கறேன்

தாத்தா குடித்தபிறகு பாட்டியிடம் நீட்டினார் மறுத்தாள்.

நான் காபி டீயெல்லாம் சாப்பிடறதில்லே தம்பி

சற்று நேரத்தில் விடைபெற்று வெளியே வர ராமலிங்கம் கூடவே வந்தார்.

ராமலிங்கம் யு ஆர் கிரேட், இன்னைக்கு முதியோர் இல்லத்திலே இருக்கறது ஒரு ரிக்ஷாகாரனோட அம்மாவோ இல்லே கூலிக்காரனோட அம்மாவோ இல்லே பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவங்களோட பெற்றோர்கள்தான். அதிலும் குறிப்பா படிச்சு பெரிய உத்யோகத்திலே இருக்கிறவங்களோட பெற்றோர்கள் தான்.. கூட்டுக்குடும்ப முறை சிதைஞ்சதும், தலைமுறைகளுக்கு இடையே ஏற்பட்ட இடைவெளியும், வீட்டுக்கு வர்ற மருமகள் வந்ததும் வராததுமா இருக்கிற பெரிசுகளை கவனிக்கமாட்டேன்னு கங்கணம் கட்டிகிட்டு புறக்கணிக்கறதும் தனிக்குடித்தனத்துக்கு தூபம் போடறதும்தான் இதுக்கான காரணங்கள். ஆனா நீங்க அப்பா அம்மாவை இல்லேயில்லே அப்பாவோட அப்பாவையும் அம்மாவையும் .வச்சு தாங்கறதும் அதுக்காக உங்க வாழ்க்கையையே தியாகம் செஞ்சிருக்கறதும் புல்லரிக்குது. நான்உங்களுக்கு தலை வணங்குகிறேன் ராமலிங்கம்.

இது தியாகம் இல்லே ஸார் கடமை, ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய கடமை.

கீப் இட் அப், அப்ப நாளைக்கு பேங்க்லே மீட் பண்ணுவோம்.

ஸார் ஜெயகுமார் வீட்டுக்குப் போறாரு, நான் கொண்டாந்து விட்டுட்டு வரட்டுமா

வேண்டாம் ராமலிங்கம் நான் காலாற நடந்து போறேன். நீங்க அவுங்களை கவனிங்க.

விடைபெற்று வெளியேறி தன் அறையை நோக்கி நடக்கலானார்.

மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை தேனீரை முடித்தவர் அனைவரிடமும் பேசினார். நாளைக்கு செகண்ட் சாட்டர்டே ஹாலிடே அதனாலே வாராந்திர ஒர்க் எல்லாத்தையும் பெண்டிங் இல்லாம முடிச்சிட்டுப் புறப்படுங்க.

அவர் சொல்லி முடிக்கவும் கேஷியர் கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

ராமலிங்கம் டேபிள் ஒர்க்தான் இருக்குங்க ஸார்

அதை கேட்ட ராமலிங்கம் தர்மசங்கடத்துடன் நெளிந்தார்.

பரவாயில்லே நான் அதைப்பார்த்துக்கிறேன் நீங்க புறப்படுங்க.

எல்லோரும் போனபின்னர் ராமலிங்கத்தை அழைத்தார்.

நீங்க போய் தாத்தா பாட்டியை பாருங்க. நான் முடிச்சுட்டுப் போறேன்

இல்லே ஸார் முடிச்சுட்டுப் போறேன்

நோ நோ நீங்க போங்க நான் பார்த்துக்கறேன்.

எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வீடு வந்து குளித்து மனைவி குழந்தைகளுடன் கோயிலுக்குப் போனார். சுவாமி தரிசனம் முடித்துவிட்டு ஒரிடத்தில் அமைதியாக உட்காரந்திருக்கும் போது மனைவி அவரிடம் பேச்சுக் கொடுத்தாள்.

நாளைக்கு லீவுதானே என் தங்கச்சி வீடு வரைக்கும் போயிட்டு வரலாமா?

மனைவியை கூர்ந்து பார்த்தார்.

Representational Image

நாளைக்கு விடிகாலைல நான் அம்மாவை பார்க்க புறப்படறேன். இனிமேல் ரெண்டுநாள் லீவு வரும்போது ஒருநாள் அம்மாவுக்காக ஒதுக்கப்போகிறேன். அந்த நாள்ளே எந்த புரோகிராமும் பிக்ஸ் பண்ணாத. நீ வேணுன்னா போய் பார்த்துட்டு வா.

அவள் முகம் மாறியது.

அம்மா இப்போ அனாதை ஆசிரமத்திலேயா இருக்காங்க சொந்த வீட்டிலே சொந்த தங்கச்சி தங்கச்சி புருஷனான மச்சினன் கூடத்தானே இருக்காங்க.

உன் தங்கச்சி இப்போ ஹஸ்பெண்ட் வீட்டிலே நிம்மதியும் நிறைவாகவும் தானே இருக்கா. கூடப்பிறந்த தங்கச்சியை மாதாமாதம் பார்க்கணுங்கற ஆர்வம் உனக்கு இருப்பதைப் போலத்தான் என்னை பெற்ற அம்மாவைப் பார்க்கணுங்கற ஆர்வம் எனக்கிருக்கும். அதை புரிஞ்சுக்கோ. உனக்கு அவ எப்படி முக்கியமா படறாளோ அதுமாதிரி என் அம்மா எனக்கு முக்கியமா படறாங்க. உனக்கு விருப்பப்பட்ட இடத்துக்கு நீபோ, எனக்கு விருப்பப்ட்ட இடத்துக்கு நான் போறேன். அதை விட்டுட்டு என்னோட மனைவிங்கற ஸ்தானத்தை வெச்சுகிட்டு வாய்க்கு வந்தபடி பேசிட்டிருந்தா தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும்.

அவர் சொன்னதைக் கேட்டு முனகலாய் அவள் ஏதோ சொல்ல முற்பட வரதராஜன் அவளை எரித்து விடுவது போல பார்த்தார்.

நெருப்புத் துண்டமாய் வந்து விழுந்த வார்த்தைகளின் உஷ்ணத்தை உணர்ந்துகொண்டவள் வாயை மூடிக்கொண்டாள்.

வாழ்க்கைப் பாதை நேரானது. அதை நம் விருப்பத்திற்காக மாற்றிக் கொள்வதும் அதை நியாயப்படுத்தவும் கூடாது. அப்படி செய்தால் அது தேவையற்ற விளைவுகளை உருவாக்கி நம் கடமைகைளை முடிக்காத ஒரு நிலையை உருவாக்கி பிற்காலத்தில் நம்மை கவலைப் படவைத்துவிடும் விடும் என்ற ஞானம் வரப்பெற்றவராய் அவர் எழுந்து நடக்க மனைவியும் மகனும் பின்தொடர்ந்தனர்

  –நெய்வாசல் நெடுஞ்செழியன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.