தலைநகர் சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், மழை நீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து புகார் அளிக்க மாநகராட்சி நிர்வாகம் உதவி எண்களை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் மூலம் மழைநீர் வெளியேறியுள்ள நிலையில், சில இடங்களில் தேங்கியுள்ள நீரை மாநகராட்சி நிர்வாகத்தினர் வெளியேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச உதவி எண் 1913 மூலம் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 04425619206, 04425619207, 04425619208 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நம்ம சென்னை செயலி அல்லது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் மூலமாகவும் உதவியை நாடலாம் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.