பிரிஸ்பேன்,
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரண்டு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த தொடரில் இன்று (செவ்வாய்கிழமை) ஒரே நாளில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.
காலை 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி, தசுன் ஷனகா தலைமையிலான முன்னாள் சாம்பியன் இலங்கையுடன் (குரூப்1) மல்லுகட்டுகிறது. இந்த ஆட்டத்தில் தோற்கும் அணியின் அரைஇறுதி வாய்ப்பு அம்பேல் ஆகிவிடும் என்பதால் இரு அணிகளும் வரிந்து கட்டி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.
20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகளும் 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 2 ஆட்டத்தில் இலங்கையும், ஒரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்று இருக்கின்றன. இதற்கிடையே, வயிற்றுபகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியில் ஹஸ்ரத்துல்லா ஜஜாய் எஞ்சிய தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக குல்படின் நைப் சேர்க்கப்பட்டுள்ளார்.
மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. அடுத்த ஆட்டத்தில் அயர்லாந்திடம் அடி பணிந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முந்தைய ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற உச்சக்கட்ட நெருக்கடியுடன் இங்கிலாந்து களம் காணுகிறது. இன்றைய ஆட்டங்களின் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்னொரு பக்கம் மழையும் மிரட்டிக்கொண்டிருக்கிறது. பிரிஸ்பேனில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.