‘தர்பார்’ படத்திற்குப் பின் லைகாவின் தயாரிப்பில் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கிறார் என்றும், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் பூஜையும் வருகிற 5-ம் தேதி சென்னையில் நடக்கின்றன என்றும் கோடம்பாக்கத்தில் செய்திகள் உலா வருகின்றன.
ரஜினி இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துவருகிறார். இதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் வில்லனாக நடித்துவருகிறார். ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போதே, ரஜினி அடுத்து தன் லைன் அப்களை அறிவிக்கப் போகிறார். இதுகுறித்து விசாரித்தோம்.
‘தர்பார்’ படத்திற்குப் பின் அவர் மீண்டும் லைகாவிற்கு இரண்டு படங்கள் நடிக்கிறார். ‘ஜெயிலர்’ பட அறிவிப்புக்கு முன்பே, இந்தக் கூட்டணி உறுதியானபோதும், ‘டான்’ படத்துக்குப் பிறகுதான் இதற்கான பணிகள் வேகம் எடுத்தன. இதற்காக ரஜினி இளம் இயக்குநர்கள் பலரிடமும் கதைகள் கேட்டு வந்தார். ‘ஜெயிலர்’ படப்பிடிப்பின் இடையேகூட, சிலர் அவரிடம் கதைகள் சொல்லியுள்ளனர். ஹெச்.வினோத், தேசிங்கு பெரியசாமி, பி.எஸ்.மித்ரன், சிபி சக்ரவர்த்தி, ‘ஜெய் பீம்’ த.செ.ஞானவேல், அருண்ராஜா காமராஜா, தெலுங்கு ‘பிம்பிசாரா’ பட இயக்குநர் மல்லிடி வாசிஷ்டா என அந்தப் பட்டியல் நீள்கிறது.
இதில் அவரது ஒரு படத்தை ‘டான்’ சிபி சக்ரவர்த்தி இயக்கப் போவதாகச் சொல்கிறார்கள். லைகாவுக்கான இன்னொரு படத்திற்கான கதை தொடர்பாக இதுவரை யாரிடமும் ரஜினி ஓகே சொல்லவில்லை என்கிறார்கள்.
இதற்கிடையே மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதர்வாவை வைத்து இயக்கவுள்ள படத்தில் கெஸ்ட் ரோலில் ரஜினி நடிக்கவும் சம்மதித்துள்ளார். ஐஸ்வர்யா இயக்கும் படத்தையும் லைகாவே தயாரிக்கிறது. ஆக, சிபி சக்ரவர்த்தி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவர்களின் பட அறிவிப்புகளே நவம்பர் 5-ம் தேதி வெளியிடப்படவிருக்கிறது என்கிறார்கள்.
மகள் இயக்கும் படம், ரஜினியின் இரண்டு படங்கள் எண்ணிக்கைக்குள் வராது, சிபிசக்ரவர்த்தி படத்தை அடுத்து, இன்னொரு இளம் இயக்குநர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார். அதற்கான கதையை அவர் ஓகே செய்த பின், அதற்கான அறிவிப்பும் வெளியாகும். இதற்கிடையே 5-ம் தேதி நடக்கும் பட பூஜையை சிம்பிளாக சோஷியல் மீடியாவிலேயே அறிவித்துவிடலாமா அல்லது பிரமாண்ட விழாவுடன் அறிவிக்கலாமா என்பது குறித்தும் தயாரிப்பு நிறுவனம் ஆலோசித்துவருவதாகச் சொல்கிறார்கள்.