திருப்பூரில் இயங்கி வரும் அம்மன் ஜுவல்லர்ஸ் நகை கடை உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் மங்கலம் சாலையில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்துவதால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களின் போது தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால், அங்குள்ள வணிக நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனையில் இருப்பவர்கள் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
எனவே மக்கள் நடமாட்டம் நிறைந்த மங்கலம் சாலைக்கு பதிலாக, நொய்யல் ஆற்றங்கரையோர காலியாக உள்ள இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை மனு அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது ஆஜரான அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார், போரட்டம் நடத்த மனுதாரர் நீதிமன்றத்திடமே அனுமதி கேட்பது போல உள்ளதாகவும், இதற்கு அனுமதியளித்தால் இது தவறான முன்னுதாரணமாகிவிடும் என கூறினார்.
மேலும், நொய்யால் ஆற்றங்கரையில் போராட்டம் நடத்த அனுமதி அளித்தால் இயற்கை பாதிப்படைய வாய்ப்பிருப்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.