Go Back Modi Trending : மோர்பி பால விபத்து – பலியெடுத்த அலட்சியம்… உச்சக்கட்ட கோபத்தில் குஜராத்!

குஜராத்தின் மோர்பி நகரில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த தொங்கு பாலம் ஒன்று, நேற்று முன்தினம் மாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கொடூர சம்பவத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்காணோர் காயமடைந்து, தங்களின் குடும்பத்தினர் பலரையும் இழந்துள்ளனர். 

இந்த சம்பவம் உலகையே உலுக்கியது. மோர்பி பாலம், விபத்து நிகழ்வதற்கு ஐந்து நாள்களுக்கு முன்னர்தான் புனரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது. ஆனால், குஜாராத் வருடப்பிறப்பை முன்னிட்டு பாலத்தை திறக்க வேண்டும் என்பதற்காக விதிகளை முறையாக பின்பற்றாமல், அவசர அவசரமாக பாலத்தை திறந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த விபத்திற்கு தொடர்புடைய 9 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கி படுகாயமடைந்து, மோர்பி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து, பிரதமர் மோடி இன்று ஆறுதல் கூற இருக்கிறார். இதனை முன்னிட்டு அவர் குஜராத்திற்கு இன்று வருகை தருகிறார்.

இந்நிலையில், பிரதமரின் வருகையை முன்னிட்டு ட்விட்டரில் இரண்டு ஹேஷ்டேக்குகள் இன்று மதியம் முதல் டிரெண்ட் ஆகி வருகிறது. #Go_Back_Modi மற்றும் #GujaratWithModiJi ஆகியவற்றின் மூலம் ட்விட்டர் பயனர்கள் தொடர்ந்து மாறி மாறி ட்வீட் செய்து வருகின்றனர்.

மேலும், பிரதமரின் வருகையொட்டி, பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை இரவோடு இரவாக சீரமைக்கப்பட்டு வருவதையும் ட்விட்டர் பயனர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். குஜராத் மாடல் என்ற பிம்பம் சிதறிவிட்டது என்றும் ஒரு ட்விட்டர் பயனர் பதிவிட்டுள்ளார். குறிப்பாக, #Go_Back_Modi என்ற ஹேஷ்டேக் குஜராத்தில்தான் அதிகம் டிரெண்டாகிறது என கூறப்படுகிறது. இருப்பினும், குஜராத் மட்டுமின்றி நாடு முழுவதும் #Go_Back_Modi டிரெண்ட் ஆனது. 

#Go_Back_Modi டிரெண்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், #GujaratWithModiJi என்ற ஹேஷ்டேக்கும் உடனடியாக டிரெண்ட் செய்யப்பட்டு, பிரதமர் மோடிக்கு ஆதரவாக மக்கள் உள்ளதாக பதிவுகள் குவிந்து வருகின்றன. சமூக வலைதளங்களில் மட்டுமின்றி, களத்திலும் பாஜகவுக்கு எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. 

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதை விட, பிரதமரின் வருகைக்குதான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அரசின் அலட்சியத்தால் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றும், பாலத்தின் நிலை குறித்து முறையாக சான்றிதழ் பெறாமல் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது மிகப்பெரும் தவறு எனவும் தெரிவித்துள்ளார். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.