இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது, 1913அம் ஆண்டு மங்கார் என்ற மலை பகுதியில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள், முதியவர்கள் 1,500க்கும் மேற்பட்ட பில் பழங்குடியினர் சுற்றி வளைத்து படுகொலை செய்யப்பட்டனர். மங்கார் படுகொலையை நினைவுகூரும் வகையில், ‘மங்கார் தம் கி கவுரவ் கதா’ என்ற பெயரில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நிகழ்ச்சி ஒன்று இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பில் பழங்குடியினர் படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக, ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள மங்கார் தம் என்ற பகுதியை நினைவு சின்னம் ஆக பிரதமர் மோடி அறிவித்தார். முன்னதாக, விடுதலைப் போராட்டத்தின் அறியப்படாத பழங்குடியின தியாகிகளுக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, குருகோவிந்தின் சிலைக்கு மலர் மரியாதை செலுத்தியதுடன் துனி வழிபாடும் மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பழங்குடியினர் தவம், தியாகம் ஆகியவற்றின் சின்னமாக விளங்கும் புனித மங்கார் பூமி எப்போதும் ஊக்கத்தை அளிக்கிறது என்று கூறினார். ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, மத்தியப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநில மக்களின் பகிரப்பட்ட பாரம்பரியமாக மங்கார் திகழ்கிறது என்று அவர் கூறினார். குரு கோவிந்தின் நினைவு தினம் அக்டோபர் 30ஆம் தேதி அனுசரிக்கப்படும் நிலையில், அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்.
குரு கோவிந்த் தமது வாழ்க்கையின் கடைசி நாட்களை குஜராத்தில் உள்ள மங்கார் பகுதியில் கழித்ததை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். இந்த பூமியில் அவரது ஆற்றலும், அறிவும் இன்னும் உணரப்படுவதாக அவர் தெரிவித்தார். ஒரு காலத்தில் தரிசு நிலமாக காட்சியளித்த இந்தப் பகுதி வன மகோத்சவத்தின் மூலம் பசுமை நிறைந்ததாக மாறியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். இந்த இயக்கத்தில் இடையறாமல் பாடுபட்டதற்காக பழங்குடியின சமுதாயத்தினருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
வளர்ச்சி காரணமாக இந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியிருப்பதோடு மட்டுமல்லாமல் குரு கோவிந்தின் போதனைகளும் இதற்கு காரணமாக அமைந்தது என்று பிரதமர் தெரிவித்தார். குரு கோவிந்த் போன்ற பெரும் விடுதலைப் போராட்ட வீரர்கள் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் லட்சியங்களின் பிரதிநிதிகளாக இருந்தனர் என்று அவர் கூறினார். குரு கோவிந்த் தமது குடும்பத்தை இழந்த போதிலும், பழங்குடியின மக்களை தனது குடும்பத்தினராக கருதினார் என்று பிரதமர் தெரிவித்தார்.
பழங்குடியின சமுதாயத்தினரின் உரிமைகளுக்காக குரு கோவிந்த் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியதுடன், தமது சொந்த சமுதாயத்தின் தீமைகளுக்கு எதிராகவும் போராடினார். சமூக சீர்த்திருத்தவாதி, ஆன்மீகத்தலைவர், துறவி மற்றும் தலைவர் என்றமுறையில் சொந்த சமுதாயத்தினருக்கு எதிராகவும் அவர் போராடினார். அவரது அறிவும், தத்துவ அம்சங்களும், சமூக நடவடிக்கைகள் மற்றும் துணிச்சலைப் போலவே எழுச்சியுடன் காணப்பட்டது. மங்கார் பகுதியில் 1913ஆம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி நடைபெற்ற படுகொலை சம்பவத்தை பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் ஆங்கிலேயர் ஆட்சியின் போது நிலவிய கொடுங்கோண்மைக்கு அது உதாரணம் என்று தெரிவித்தார்.
ஒரு புறம் விடுதலைக்குப் போராடும் அப்பாவி பழங்குடியின மக்களை மங்கார் பகுதியில் சுற்றி வளைத்து படுகொலை செய்தனர். இதில் 1,500 அப்பாவி மக்கள், பெண்கள், மூத்த குடிமக்கள், குழந்தைகள் என பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டனர். இந்த துரதிருஷ்டவசமான சம்பவம் விடுதலைப் போராட்டத்தை வீறு கொள்ள வைத்தது. ஆனால் வரலாற்றுப் புத்தகங்களில் இவை இடம் பெறவில்லை. விடுதலையின் அமிர்தப் பெருவிழாக்காலத்தில் இந்த இடைவெளியை இந்தியா பூர்த்தி செய்து பல பத்தாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற தவறுகளை அரசு சரி செய்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம் வருங்கால வரலாறு பழங்குடியினர் இல்லாமல் முழுமையடையாது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பகவான் பிர்சா முண்டா பிறந்தநாளான நவம்பர் 15-ம் தேதியை பழங்குடியினர் கவுரவ தினமாக நாடு கொண்டாடவிருப்பதாக கூறிய பிரதமர், விடுதலைப் போராட்டத்தில் பழங்குடியினரின் வரலாற்றை மக்களுக்கு கற்பிக்கும் ஒரு முயற்சி இது என்று கூறினார். மக்களிடையே பழங்குடியினர் சமுதாயத்தின் வரலாற்றை கொண்டு செல்லும் முயற்சியாக நாடு முழுவதும் பழங்குடியினர் விடுதலைப் போராட்ட வீரர்களுக்காக சிறப்பு அருங்காட்சியகங்கள் கட்டப்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறினார். இளம் தலைமுறையினரிடையே இந்த பாரம்பரியத்தை கொண்டு சென்று விடுதலை உணர்வை ஊட்ட, இது பயன்படும் என்று அவர் தெரிவித்தார்.
நாட்டில் பழங்குடியினர் சமுதாயத்தின் பங்கை விரிவுப்படுத்த எழுச்சியுடன் கூடிய அர்ப்பணிப்பு உணர்வு அவசியமாகும் என்று வலியுறுத்திய பிரதமர், ராஜஸ்தான், குஜராத் முதல் வடகிழக்கு, ஒடிசா மாநிலங்கள் வரை பல்வேறு வகையான பழங்குடியின சமுதாயத்திற்கு தொண்டாற்ற தெளிவான கொள்கைகளுடன் நாடு பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார். வனப்பாதுகாப்பு கல்யாண் திட்டத்தின் கீழ் பழங்குடியினருக்கு குடிநீர், மின்சார இணைப்புகள், கல்வி, சுகாதார சேவைகள், வேலைவாய்ப்புகள் ஆகியவை அளிக்கப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார்.
தற்போது காடுகளின் விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டு இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், அதே சமயம் டிஜிட்டல் இந்தியாவுடன் பழங்குடியினப் பகுதிகளும் இணைக்கப்படுவதாகத் தெரிவித்தார். பழங்குடியின இளைஞர்களுக்கு பாரம்பரிய திறன்களுடன் நவீன கல்வியை ஊட்டுவதற்கான வாய்ப்புகளை ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிகள் வழங்குவதாக அவர் கூறினார்.
மங்கார் தாமின் வளர்ச்சிப் பற்றி குறிப்பிட்ட பிரதமர், அதனை விரிவாக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறினார். இந்த மங்கார் தாமின் வளர்ச்சி புதிய தலைமுறையினருக்கு உந்து சக்தியாக திகழும் என்றும் தெரிவித்தார்.