பிரேசில் அதிபர் தேர்தலில் இடதுசாரி தலைவரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றிருக்கிறார். சில்வாவின் வெற்றி வெறும் பிரேசிலில் வெற்றியாக மட்டும் உலக நாடுகளால் பார்க்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சரிவை சந்தித்து வந்த இடதுசாரிகளுக்கு தென் அமெரிக்காவில் நடந்து வரும் இந்த மாற்றம் பெரும் நம்பிக்கை அளித்திருக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை.
தென் அமெரிக்க நாடுகளில் இருக்கும் அரசியல் நாம் வெளியிலிருந்து பார்ப்பதைவிட சிக்கலானது. இடதுசாரிகட்சிகளில் தாயகமாக கருதப்பட்டு வந்த தென் அமெரிக்க நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாக வலதுசாரிகளின் ஆதிக்கம் தொடர்ந்து வந்தது. இந்தச் சூழலில் அங்குள்ள இடதுசாரி கட்சிகளின் தீவிர களப் போராட்ட முடிவு, ஆட்சியை பெற்று தந்திருக்கிறது. மக்கள் வலதுசாரி அரசாங்கத்தை நிராகரித்து, இடதுசாரி தலைவர்களை ஆட்சியில் அமர்த்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தென் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி கட்சிகள் வலுபெற்று வருகின்றன. அதன்படி 2019-ஆம் ஆண்டு கியூபாவில் மைக்கேல் டியாஸ் கேனல், அர்ஜெண்டினாவில் ஆல்பர்டோ பெர்னாடஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர். போலிவியாவில் 2020-ஆம் ஆண்டு லுயிஸ் வெற்றி பெற்றார். 2021-ஆம் ஆண்டு ஹோண்டிரஸ்ஸில் கேஸ்ட்ரோவும், நிகராகுவாவில் டேனியலும், பெருவில் பெட்ரோவும், சிலியில் கேப்ரியலும் வெற்றி பெற்றனர்.
2022-ஆம் ஆண்டு கொலம்பியா, பிரேசிலில் பெட்ரோ மற்றும் லுலா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இவ்வாறு மெல்ல மெல்ல தென் அமெரிக்கா இடதுசாரி தலைவர்கள் கையில் வந்திருக்கிறது. தென் அமெரிக்க நாடுகளின் அதிபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலாளர்கள் அமைப்பின் பின்னணியில் இருந்து வந்தவர்கள். இதனால் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டின் கீழுள்ள மக்களிடம் இவர்களுக்கு செல்வாக்கு அதிகமாக இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏன் இந்த மாற்றம்? 2000-க்குப் பிறகு உலக அளவில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து தேசியவாத கொள்கைகள் மூலம் வலதுசாரி தலைவர்களுக்கு மக்களிடம் செல்வாக்கு மெல்ல மெல்ல வளர்ந்தது. இவை அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளிலும் எதிரொலித்தது.
இந்த நிலையில், கடந்த பத்து வருடங்களில் பொருளாதாரம் சார்ந்து தொடர்ச்சியான ஏற்றங்களை தர வலதுசாரி தலைவர்கள் தவறினர். மேலும் பொருளாதாரத்தை வலுப்படுத்த செல்வந்தர்களுக்கு ஆதரவாக வலதுசாரி அரசாங்கங்கள் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கிடையில்தான் வலதுசாரிகளில் தேசியவாத கொள்கைகள் மக்களிடம் வலுவிழந்து வந்தது. தற்போது இதன் தொடர்ச்சியாகத்தான் ட்ரம்ப், நெதன்யாகு, ஸ்காட் மோரிசன், ஜெய்ர் போல்சனோரா ஆகிய தலைவர்கள் தங்கள் பதவிகளை இழந்து வருகின்றனர்.
பணவீக்கம், வறுமை போன்றவை தற்போது உலகளவில் பெரும் பிரச்சினையாக பார்க்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், வறுமையை நிச்சயம் கலைவோம் என்ற பிரச்சாரத்தின் அடிப்படையில் இடதுசாரிகள் பதவிகளில் அமர்ந்து வருகின்றனர்.
இடதுசாரி தலைவர்களுக்கு காத்திருக்கும் சவால்கள்: உக்ரைன் – ரஷ்யா போரினால் உலகம் முழுவதும் பொருளாதார சரிவு நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மீட்டெடுப்பதற்கான தீவிரமான முயற்சி இடதுசாரி தலைவர்களுக்கு தேவைப்படுகிறது. தென் அமெரிக்க நாடுகளில் கடந்த பத்து ஆண்டுகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியிலும் அவர்கள் இறக்க வேண்டும். அப்போதுதான் உணவுத் தேவையை அவர்களால் சமாளிக்க முடியும். இது உலக நாடுகளுக்கும் பொருந்தும்.
தென் அமெரிக்கா நாடுகளில் இடதுசாரிகளின் இந்த வெற்றி தேசியவாத நலனை முன்வைக்கும் கட்சிகளுக்கு சிறு தடுமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு இடதுசாரி தலைவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இடதுசாரிகளின் இந்த வெற்றி தென் அமெரிக்காவுடன் நிற்கப் போகிறதா அல்லது உலக முழுவதும் பரவப் போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!