புதுடெல்லி: குஜராத்தின் மோர்பி நகரில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் வரும் 14-ஆம் தேதி (நவ.14) விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் யுயு லலித், பேலா எம் திரிவேதி ஆகியோ இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 14-ஆம் தேதிக்குப் பட்டியலிட்டுள்ளனர்.
மோர்பி நகர் விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த ஆணையம் அமைக்கக் கோரி அந்த பொது நல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவரே இந்த பொதுநல வழக்கைத் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் அவர், “மோர்பி நகர் சம்பவத்திற்கு விசாரணைக் கமிஷன் அமைக்க உத்தரவிடக் கோரியதுடன், மாநில அரசுகளுக்கு இதுபோன்ற பழமையான கட்டிடங்கள், பாலங்களை ஆய்வு செய்து அவற்றின் பாதுகாப்பு பற்றி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடவும் கோரியுள்ளார்.
அதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் நிரந்தரமாக பேரிடர் விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவை இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்கும் போது உடனடியாக செயல்பட முடியும்” என்றும் கோரியுள்ளார். இந்த வழக்கு வரும் 14-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
குஜராத் மோர்பி நகரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை சத் பூஜையை ஒட்டி ஏராளமான மக்கள் தொங்கு பாலத்தில் திரண்டிருந்தனர். அப்போது திடீரென பாலம் அறுந்து விழுந்ததில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் பாலம் 8 மாதங்களாகப் பராமரிப்புக்காக மூடப்பட்டிருந்தது. அண்மையில் தான் இந்தப் பாலம் திறக்கப்பட்டது. திறந்து 4வது நாளே மிகப் பெரிய விபத்து நடந்துள்ளது. இப்போது பாலத்தை சீரமைத்து ஓரீவா நிறுவனம் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக குஜராத் போலீஸார் இபிகோ 304, 308 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த விபத்துக்கு குஜராத் அரசு பொறுப்பேற்றுள்ளது. உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் நிவாரண நிதியில் இருந்தும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.