தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்குப் பருவமழை துவங்கியதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, வானிலை ஆய்வு மையம், மழைப் பொழிவு இந்த மாதம் நான்காம் தேதி வரை நீடிக்கும் என்றும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் மழைப் பொழிவின் அளவு சற்று அதிகரிக்கும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வடகிழக்குப் பருவமழைக்கான தொடர் நடவடிக்கைகள் மற்றும் ஆயத்தப் பணிகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைகளில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியாவது, “கனமழையை நாம் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு நமக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.
இதையடுத்து, மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், கைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் அனைத்தும் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும். அதேபோல், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களில் வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி போன்றவையும் செய்து தர வேண்டும்.
அவ்வாறு மக்களை வெளியேற்றும் போது முதியவர்கள் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மழைக்காலத்தின் போது பல அரசுத்துறைகளும் தனித்தனியாக செயல்படாமல் ஒன்றாகச் சேர்ந்து செயல்பட வேண்டும். ஆக மொத்தத்தில் அனைத்து மக்களையும் காக்க வேண்டும் என்பதே நமது இலக்கு” என்றுத் தெரிவித்தார்.