குஜராத் தொங்கு பாலத்தில் மிகப்பெரிய ஊழல்: அரவிந்த் கெஜ்ரிவால் சரமாரிக் கேள்வி!

குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள தொங்கு பாலம் கடந்த 30ஆம் தேதி விழுந்து விபத்துக்குள்ளானது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் ரூ.2 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த தீபாவளியன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட நிலையில், பாலம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி 135 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலம் விபத்து தொடர்பாக குஜராத் மாநில அரசு விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. இதனிடையே, விபத்து தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பாலத்தை புதுப்பித்த கட்டுமான நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மோர்பி தொங்கு பாலம் விபத்து தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவை வருகிற 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லலித் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நிலையில், மோர்பி தொங்கு பாலத்தில் ஏற்பட்ட விபத்து, மிகப்பெரிய ஊழலின் விளைவால் ஏற்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சாடியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “மோர்பி தொங்கு பாலத்தில் ஏற்பட்ட விபத்து, மிகப்பெரிய ஊழலின் விளைவால் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். பாலம் கட்டுவதில் எந்த அனுபவமும் இல்லாத, கடிகாரம் தயாரிக்கும் நிறுவனத்திடம், ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டது ஏன்? உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டுள்ளதா?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

முன்னதாக, டெல்லி திகார் சிறையில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்காக ஆம் ஆத்மி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு 10 கோடி ரூபாய் கொடுத்ததாக அரசியல் செல்வாக்கு தனக்கு உள்ளதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் கடந்த மாதம் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவிற்கு திகார் சிறையில் இருந்தவாறே தனது வழக்கறிஞர் மூலம் எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டுகள் மோர்பி பாலம் விவகாரத்தை மறைக்கவே கிளப்பி விடப்பட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.