மொகதிசு: சோமாலியாவில் 120 பலியான பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சர்வதேச நாடுகளுக்கு அந்நாட்டு அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சோமாலிய தலைநகர் மொகாடிஸ்ஹூவில் உள்ள அந்நாட்டின் கல்வி அமைச்சகத்தின் முன்பாக சனிக்கிழமை கார் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்தது. இதில் 120 பேர் பலியாகினர் பலர் படுகாயமடைந்தனர். இந்த கார் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு உதவ சர்வதேச நாடுகளுக்கு சோமாலியா அதிபர் ஷேக் முகமத் தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், “சர்வதே சமூகத்திற்கு நான் ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். சோமாலியாவின் நட்பு நாடுகளே, அரபு நாடுகளே… தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவர்களை அனுப்புங்கள். சிகிச்சை தாமதமானால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
சோமாலிய அரசுக்கு எதிராக அல்கொய்தாவுடன் இணைக்கப்பட்டுள்ள அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்தினர் அந்நாட்டில் அரசுக்கு எதிராகத் தொடர்ந்து நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் ஹோட்டல்கள் மற்றும் சோதனைச்சாவடிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் சமீப காலமாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், அல் ஷபாப் தீவிரவாதிகள்தான் இந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலையும் நடத்தி இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.