135 பேரை பலி வாங்கிய குஜராத்தின் மோர்பி நகர பாலம் விபத்து நடந்த பகுதியில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார்.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க தொங்கு பாலம் கடந்த 30-ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 135-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்தும் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த விபத்து தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, வரும் 14-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி லலித் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில், 135 பேரை பலி வாங்கிய குஜராத்தின் மோர்பி நகர பாலம் விபத்து நடந்த பகுதியில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார். விபத்து நடந்த பாலத்தின் மீது ஏறி பிரதமர் மோடி ஆய்வு பணிகளை மேற்கொண்டார். மேலும், விபத்தில் மச்சு ஆற்றுக்குள் விழுந்தவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த பணிகளையும் பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அதன் பின்னர், பாலம் விழுந்த விபத்தில் படுகாயமடைந்து சிக்சிசை பெற்றுவருபவர்களை மருத்துவமனைக்கு சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். பாலம் ஆய்வு பணியின் போது பிரதமர் மோடியுடன் குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் உடன் இருந்தார்.