சூரத்: குஜராத் மாநிலம் மோர்பி பால விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து பிரதமர் மோடி நலம் விசாரித்தார். அவருடன், குஜராத் முதல்வர், அம்மாநில உள்துறை அமைச்சர் ஆகியோரும் உடனிருந்தனர்.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தொங்கு பாலம் உள்ளது. இந்த பாலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் மறுசீரமைக்கப்பட்டு சில நாட்களுக்கு முன் மக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்கப்பட்டது.இதனை அடுத்து சாத் பூஜை மற்றும் விடுமுறையையொட்டி கடந்த 30-ம் தேதி மாலை அந்த தொங்குபாலத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
அப்போது பாரம் தாங்காமல் திடீரென தொங்குபாலம் அறுந்து விழுந்தது. இதில், பாலத்தின் மீது நின்றுகொண்டிருந்த அனைவரும் மச்சு ஆற்றுக்குள் விழுந்தனர். இந்த விபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆற்றில் இருந்து 170 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆற்றுக்குள் மேலும் சிலர் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 135 பேரை பலி வாங்கிய குஜராத்தின் மோர்பி நகர பாலம் விபத்து நடந்த பகுதியில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்னர், பாலம் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். பின்னர் மோர்பி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு சென்று அங்கு மூத்த அதிகாரிகளுடன் பாலம் விபத்து குறித்து உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.
அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டர்.மேலும் விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.