தன்னை தகுதி நீக்கம் செய்த பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக, அவதூறு வழக்கு தொடரப் போவதாக, அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இம்ரான் கான் தலைமையிலான அரசு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிழ்ந்தது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத இம்ரான் கான், தனது தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதற்கு வெளிநாட்டு சதி இருப்பதாகக் கூறி வருகிறார்.
இதற்கிடையே, இம்ரான் கான் பதவியில் இருந்த போது, தனக்கு கிடைக்கப் பெற்ற கிராப் கைக்கடிகாரம், பேனா, மோதிரம், ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுகளை, அதிக விலைக்கு முறைகேடாக விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இலங்கை தமிழர் பிரச்னைகளுக்கு தீர்வு – அதிபர் ரணில் விக்ரமசிங்கே உறுதி!
இது தொடர்பாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம், ஆளும் கட்சி எம்பிக்கள் புகார் அளித்தனர். இந்தப் புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், இம்ரான் கான் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவரை ஐந்து ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், தன்னை தகுதி நீக்கம் செய்த பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக, அவதூறு வழக்கு தொடரப் போவதாக, அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
என்னை தகுதி நீக்கம் செய்ததன் மூலம் என் மீது தோ்தல் ஆணையம் அவதூறு பரப்பி உள்ளது. அதற்கு இழப்பீடாக 1,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்த ஆணையத்தின் மீது வழக்குத் தொடர உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.