உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் போன்ற நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் கடந்த வாரம், ட்விட்டர் நிர்வாகத்தைத் தன் வசப்படுத்தினர். பிறகு “ட்விட்டர் பறவைக்குச் சுதந்திரம்!” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது ட்விட்டர் புரொபைலில் ‘Chief Twit’ என்றும் மாற்றி இதை உற்சாகத்துடன் அறிவித்திருந்தார். இந்நிலையில் முன்பே எதிர்பார்த்தபடி தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து நவம்பர் 1-ம் தேதி (இன்று) முதல் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்படும், 75% பேர் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள், அடுத்த 3 ஆண்டுகளில் ட்விட்டர் நிறுவனத்தின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என்று அதிரடித் தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.
$20 a month to keep my blue check? Fuck that, they should pay me. If that gets instituted, I’m gone like Enron.
— Stephen King (@StephenKing) October 31, 2022
அதுமட்டுமின்றி ட்விட்டர் பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களும், நடவடிக்கைகளும் வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்குகளைக் குறிக்கப் பயன்படும் ப்ளூ டிக் வைத்திருக்கும் ப்ளூ டிக் பயனாளர்களிடம் மாதம்தோறும் 19.99 அமெரிக்க டாலர்கள் (ரூ.1,600 வரை) கட்டணம் வசூலிக்க ட்விட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது. இந்நிலையில் இந்தப் புதிய ப்ளூ டிக் கட்டணம் தொடர்பான சர்ச்சைக் குறித்து ஸ்டிபன் கிங் என்ற பிரபல அமெரிக்க நாவலாசிரியர், “ஒரு ப்ளூ டிக்கிற்கு 20 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டுமா ? நீங்கள் தான் எனக்கு பணம் தர வேண்டும். இது நடைமுறைப்படுத்தப்பட்டால் நான் திவாலாக வேண்டியதுதான்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த எலான் மஸ்க், “நாங்களும் எப்படியாவது இந்தக் கட்டணத்தை (பில்) செலுத்தியாக வேண்டும்தான். ட்விட்டர் விளம்பரதாரர்களை மட்டுமே நம்பியிருக்க முடியாது. 8 அமெரிக்க டாலர் என்றால் செலுத்துவீர்களா” என்று பதிலளித்துள்ளார். ப்ளூடிக் கட்டணம் தொடர்பான அதிகாரப் பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிட்டபடாத நிலையில் எலான் மஸ்க்கின் இந்த ட்வீட் மூலம் இது உறுதியாகியுள்ளது என்று பலர் பதிவிட்டு வருகின்றனர். ‘இது போன்ற கடுமையான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டால் வேறு சமூக செயலிக்கு மாறிவிட வேண்டியதுதான்’ என்று நெட்டிசன்கள் பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு ஏற்றாற்போல ட்விட்டரை நிறுவியவர்களில் ஒருவரான ஜாக் டோர்சி, ‘ப்ளூஸ்க்கை (Bluesky)’ என்ற புதிய சமூக வலைதள செயலியை ட்விட்டருக்கு மாற்றாக விரைவில் களம் இறக்கப்போகிறார் என்ற செய்திகளும் கசிந்த வண்ணம் இருக்கின்றன.