சென்னை: சென்னையில் பெரம்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக இன்றும் (நவ.2) தண்ணீர் தேங்கியுள்ளது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த அக்.31ம் தேதி முதல் நேற்று (நவ.1) ம் தேதி மாலை வரை கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை குறைந்த மழை, இன்று காலை முதல் மீண்டும் பெய்யத் தொடங்கியது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி சென்னை மாநகராட்சி அலுவலகம், பெரம்பூர் மாநகராட்சி பூங்கா பகுதிகளில் தலா 17 செ.மீ மழையும், சோழிங்கநல்லூர், அயனாவரம், அம்பத்தூர், எம்ஜிஆர் நகர், நுங்கம்பாக்கத்தில் தலா 13 செ.மீ மழையும், ஆவடியில் 17 செ.மீ மழை, பொன்னேரியில் 16 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் ஒரு சில இடங்களில் 2வது நாளாக தண்ணீர் தேங்கி உள்ளது. இதன்படி கொளத்தூர் வெற்றி நகரில் இரு சக்கர வானங்கள் தண்ணீருக்குள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. வியாசர்பாடி ஜீவா சுரங்ப்பாதையில் 2வது நாளாக தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மந்தவெளி பேருந்து நிலையம் முழுவதும் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனைத் தவிர்த்து வில்லிவாக்கம் ஜனநாதன் தெரு, பெரம்பூர் பிபி சாலை, பட்டாளம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. இந்த தண்ணீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.