நெல்லை : கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலப்பாளையத்தில் 4 வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர். 4 மணி நேரம் நடந்த இந்தச் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜமேஷா முபின் (29). பழைய துணி வியாபாரி. இவர் கடந்த 23ம் தேதி காரில் கோட்டை ஈஸ்வரர் கோயில் முன் சென்று கொண்டிருந்த போது, காரிலிருந்த சிலிண்டர் வெடித்தது.
இதில் அதே இடத்தில் உடல் கருகி அவர் இறந்தார். அவரது வீட்டில் சோதனை நடத்திய போது, அங்கே வெடி பொருட்கள் தயாரிப்பதற்கான 75 கிலோ மூலப் பொருட்கள் இருப்பது ெதரியவந்தது.இது தொடர்பாக உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த முகமது தல்கர் (25), முகமது அசாருதீன் (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (28), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேரை உக்கடம் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 5 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கோவையில் 5 இடங்களில் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியது அம்பலமாகியது. பின்னர் இந்த வழக்கின் விசாரணையை என்ஐஏவுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்கிடையே தமிழகம் முழுவதும் சந்தேகப்படும் நபர்களின் வீட்டில் சோதனை நடத்துமாறு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து எஸ்.பி.க்களுக்கும் உத்தரவிட்டார். அதன்படி மேலப்பாளையத்தைச் சேர்ந்த அரபிக் கல்லூரி பேராசிரியர் முகமது உசேன் மன்பஈ, ஏர்வாடி மதீனா நகரைச் சேர்ந்த அப்துல் காதர் மன்பஈ (40) ஆகிய 2 பேரின் வீடுகளில் மேலப்பாளையம், ஏர்வாடி ேபாலீசார் கடந்த 27ம் தேதி சோதனை நடத்தினர்.
இதில் எந்த ஆவணங்களோ, பொருட்களோ கைப்பற்றப்படவில்லை. இவர்கள் 2 பேரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்ததால் போலீசார் சோதனை நடத்தியது தெரியவந்தது.
இந்நிலையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் (கிழக்கு) சீனிவாசன் அறிவுறுத்தலின்படி, நெல்லை மாநகர போலீசார் மேலப்பாளையம் காதர் மூப்பன் தெருவைச் சேர்ந்த சாஹிப் முகமது அலி(35), சையது முகமது புகாரி(36), முகமது அலி(38) முகமது இப்ராஹிம் (37) ஆகிய 4 பேர் வீடுகளில் நேற்று சோதனை நடத்தினர்.
மேலப்பாளையம் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் நான்கு குழுக்களாக பிரிந்து காலை 7 மணி முதல் 11 மணி வரை 4 மணி நேரம் விஏஓ முன்னிலையில் போலீசார் சோதனை நடந்தது. அப்போது 4 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து அந்த செல்போனில் உள்ள நம்பர்கள் அனைத்தையும் தங்களது கணினியில் சேகரித்தனர். இவர்கள் யாருடன் பேசினார்கள், என்ன பேசினார்கள்? என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தினர். இதனால் மேலப்பாளையம் பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை திருவிழாவில் வெடிகுண்டு வெடித்தது சம்பந்தமாக இவர்களிடம் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது முகமது அலி ஒரு இஸ்லாமிய அமைப்பிற்கு ஆன்லைன் மூலம் பணம் வசூலிக்க முயற்சி செய்தது குறித்தும் என்ஐஏ விசாரித்தது குறிப்பிடத்தக்கது.