திருமாவுக்கு போட்டியாக கிருஷ்ணசாமி.. நாள் குறிச்சாச்சு.. அனுமதி கிடைக்குமா?

ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில் அதற்கு அனுமதியளிக்க கூடாது என பல்வேறு கட்சிகள் குரல் எழுப்பின. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு சமூக நல்லிணக்கப் பேரணி நடத்த அழைப்பு விடுத்தார். தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் அந்த பேரணியை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.

இந்நிலையில் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் கோவையில் வரும் நவம்பர் 17ஆம் தேதி அமைதி பேரணி நடைபெறும் என என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “வெடிகுண்டு மற்றும் இன, மதக் கலவரங்களுக்குக் கோவை மாநகரை கேந்திரமாக மாற்றும் அனைத்து முயற்சிகளையும் முறியடித்து, கோவை மாநகரை அனைவரும் ஒற்றுமையுடனும், ஒருமைப்பாட்டுடனும் வாழ்ந்திடும் தலமாக மாற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.

எனவே, கோவை மாநகரில் நிரந்தரமாக அமைதியை, சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் பொருட்டு நவம்பர் 17ஆம் தேதி கோவையினுடைய அனைத்து கல்வி நிறுவனங்கள், தொழில், வணிக நிறுவனங்கள், மத மற்றும் சமுதாய அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளக்கூடிய வகையில் ஓர் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது.

இந்த பேரணி முழுக்க முழுக்க அரசியல், மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு கோவையின் பாரம்பரிய அமைதியையும், தொழில், வணிக செழுமையையும் மீட்டெடுக்கும் பொருட்டு நடைபெறக்கூடிய ஒரு மக்கள் இயக்கம் ஆகும். எனவே, இதில் அனைவரும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும்” என்று அதில் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்.பேரணி, விசிகவின் சமூக நல்லிணக்கப் பேரணி ஆகியவற்றுக்கு அவர்கள் விண்ணப்பித்த தேதி அல்லாமல் வேறு தேதிகளே ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் கிருஷ்ணசாமியின் இந்த பேரணிக்கு காவல்துறை உடனடியாக அனுமதி கொடுக்குமா, அல்லது மாற்று தேதியை வழங்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.