ராய்ப்பூர்,
ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இந்த நிலையில், அங்கு முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தனக்குத்தானே நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்த விவகாரம், அவருடைய பதவிக்கு வேட்டாக மாறி உள்ளது. அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க கோரிக்கை வைத்தது.
அதன்பேரில் விசாரணை நடத்தி, அவரது எம்.எல்.ஏ. பதவியை பறிக்க பரிந்துரை செய்து மாநில கவர்னர் ரமேஷ் பயசுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி தேர்தல் கமிஷன் அறிக்கை அனுப்பியது.
முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறித்தால், முதல்-மந்திரி பதவியும் போய் விடும், ஆட்சி கவிழும் நிலை உருவாகும். ஆனால் தேர்தல் கமிஷனின் அறிக்கையின்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கவர்னர் ரமேஷ் பயஸ் மவுனம் காத்து வருகிறார். இதனால் குதிரைப்பேரம் நடந்து ஆட்சி பறிபோய் விடுமோ என்று ஹேமந்த் சோரன் பயந்துபோய் உள்ளார்.
இந்த நிலையில், ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு தொடர்பாக முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராஞ்சியில் உள்ள அலுவலகத்தில் நவ.03 நாளை (வியாழ்க்கிழமை) விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நோட்டீஸில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மற்றும் இருவரை அமலாக்கத்துறை அண்மையில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.