திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோயில் ஐப்பசி திருவிழா ஆராட்டு ஊர்வலத்தை முன்னிட்டு நேற்று திருவனந்தபுரம் விமானநிலையம் 5 மணி நேரம் மூடப்பட்டது. 10 விமானங்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ஐப்பசி திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன்தொடங்கியது. கடைசி நாளான நேற்று ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 5 மணியளவில் பத்மநாபசுவாமி கோயிலில் இருந்து இந்த ஆராட்டு ஊர்வலம் புறப்பட்டு திருவனந்தபுரம் விமானநிலைய ஓடுபாதை வழியாக சங்குமுகம் கடற்கரையை அடைந்தது. பின்னர் கடலில் சுவாமியின் விக்கிரகத்திற்கு ஆராட்டு நடைபெற்றது. இதன் பின்னர் அதேபோல விமானநிலைய ஓடுபாதை வழியாக ஊர்வலம் பத்மநாபசுவாமி கோயிலை அடைந்தது.
இந்த ஆராட்டு ஊர்வலம் கடந்த 90 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. விமான நிலையம் வருவதற்கு முன்பு விமான நிலையம் இருந்த பகுதி வழியாகத்தான் ஊர்வலம் சென்று வந்தது. விமானநிலையம் வந்த பின்னரும் ஊர்வலம் விமானநிலைய பகுதி வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. வருடத்தில் பங்குனி மற்றும் ஐப்பசி மாத திருவிழாக்களில் ஆராட்டு ஊர்வலம் நடைபெறும். இந்த இரண்டு நாட்களிலும் மாலையில் 5 மணி நேரத்திற்கு விமானநிலையம் மூடப்படும். போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்படும். இதேபோல நேற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திருவனந்தபுரம் விமான நிலையம் மூடப்பட்டது. 10 விமானங்களின் புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டது.