ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்வார் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
2009ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேலின் பிரதமராக நெதன்யாகு பதவி வகித்தார். இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி புகார்கள் கடந்த சில வருடங்களாக எழுந்து வந்தன.
நெதன்யாகு பதவி விலகக் கோரி ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்களும் நடைபெற்று வந்தன. எனினும் தொடர்ந்து நெதன்யாகு தனது பதவியைத் தக்கவைத்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நெதன்யாகுவின் லிகுட் கட்சி அதிக இடங்களில் வென்றது. ஆனாலும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைப்பதில் நெதன்யாகுவுக்குச் சிக்கல் நீடித்து வந்தது.
இந்நிலையில் இஸ்ரேலில் அரபுக் கட்சி தலைமையில் வலதுசாரி அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து நெதன்யாகுவின் ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைத்தன.இந்தச் சூழலில் நேற்று இஸ்ரேலில் நான்கு ஆண்டுகளில் 5வது முறையாக பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. வாக்குப் பதிவுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் இன்றே அறிவிக்கப்பட உள்ளன. அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று நெதன்யாகு ஆட்சி அமைப்பார் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு, “ மக்களின் நம்பிக்கையை நாங்கள் பெற்றுள்ளோம். மக்கள் மாற்றுப் பாதையை தேர்வு செய்திருக்கிறார்கள். மக்களுக்கு பாதுகாப்பும், அதிகாரமும் வேண்டும். மிகப் பெரிய வெற்றியின் விளிம்பில் இருக்கிறோம். நிலையான அரசை நாம் அளிப்போம்” என்றார்.