சென்னையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீரை அகற்றும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுவருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை புளியந்தோப்பு பிரகாஷ்ராவ் காலனியைச் சேர்ந்த சாந்தி (46) என்பவர் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “விபத்து நடந்தபோது 108 ஆம்புலன்ஸ்கூட வரவில்லை. ஒரு நாள் மழைக்கு தண்ணீர் எங்கும் தேங்கவில்லை என தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள். தண்ணீர் தேங்கவில்லை எனக் கூறுவதும் உண்மையல்ல. இன்னும் மழை நீடிக்கவிருக்கிறது. முதல்வரின் தொகுதியான கொளத்தூரில்கூட தண்ணீர் தேங்கி நிற்கிறது. தனியார் தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் அந்தப் பகுதியை படம் பிடிக்கச் சென்றபோது சில அதிகாரிகளால் மிரட்டப்பட்டிருக்கிறார்.
20-ம் தேதி ஆரம்பிக்க வேண்டிய பருவமழை 29-ம் தேதிதான் தொடங்கியிருக்கிறது. ஆனாலும், இன்னும் முன்னெச்சரிக்கை பணிகள் நிறைவடையவில்லை. மாம்பலம், சைதாபேட்டை. கிண்டி, கோடம்பாக்கம், கொளத்தூர், வடசென்னை உள்ளிட்ட பல இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நிர்வாக திறனற்ற, தூங்குகிற விடியாத அரசுதான் இந்த தி.மு.க அரசு. எங்களுக்கு தி.மு.க பகையாளிதான். தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பா.ஜ.க-வுடன் உறவு வைத்துக் கொள்வோம். எங்கள் கட்சியில் மூக்கை நுழைக்க அவர்கள் யார்? பா.ஜ.க-வும் அதை செய்யாது” எனத் தெரிவித்திருக்கிறார்.