கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுமாறு ஜனாதிபதியிடம் கொடுக்க திமுக தயார் செய்துள்ள மனுவில் கையெழுத்திட அறிவாலயத்துக்கு வருமாறு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், திமுக கூட்டணி கட்சிகளுக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. கவர்னர் ரவியின் பேச்சுகளுக்கு திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கோவை கார் வெடிப்பு குறித்த கவர்னர் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஏற்கனவே தமிழக அரசு அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதையடுத்து, கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுமாறு ஜனாதிபதியிடம் மனு கொடுக்க திமுக முடிவு செய்து, அதற்காக மனு ஒன்றை தயார் செய்துள்ளது. அந்த மனுவில் கையெழுத்திட அறிவாலயத்துக்கு வருமாறு திமுக பொருளாளரும், திமுக பாராளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த அழைப்பில், “கவர்னரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனு கொடுக்கப்பட உள்ளது. திமுக எம்பிக்கள் மற்றும் திமுகவுடன் ஒருமித்த கருத்து கொண்டுள்ள அரசியல் கட்சிகள் அந்த மனுவில் கையெழுத்திட அழைக்கிறோம். 3-ம் தேதிக்கு முன்பு அறிவாலயத்துக்கு வந்து அந்த மனுவை படித்துப் பார்த்து கையெழுத்திட கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.