குஜராத் மாநிலம் மோர்பி நகரில் கேபிள் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் நான்கு பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது மோர்பி நீதிமன்றம். மற்ற ஐந்து பேர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் மோர்பியில் சத் பூஜை கொண்டாட்டத்தின்போது, தொங்கும் கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் 130க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பாலம் பராமரிப்பு ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்றைய தினம் மோர்பி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பல்வேறு முக்கிய வாதங்களை முன்வைத்தார். அதில், “பாலத்தின் தரைப்பகுதி மட்டுமே சீரமைக்கப்பட்டுள்ளது. பாலத்தில் உள்ள கேபிள் முழுமையாக சீரமைக்கப்படவில்லை. இதன் காரணமாகவே சுமை தாங்க முடியாமல் கேபிள் அறுந்து விழுந்துள்ளது. பாலம் சீரமைக்கும் பணி இரண்டு ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இரு நிறுவனங்களும் இந்த பணியை மேற்கொள்ள தகுதியற்றவை.
எனவே இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களை விசாரிக்க அனுமதி வேண்டும்” என்றார். அவரது கோரிக்கையைடுத்து மோர்பின் நீதிமன்றம், ஓரீவா குழுமத்தின் இரண்டு மேலாளர்கள் மற்றும் இரண்டு சப் காண்ட்ராக்டர்களையும் சனிக்கிழமை வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும் மற்ற ஐந்து பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது மோர்பி நீதிமன்றம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM