அரசியல் ரீதியாக திமுக அரசுக்கு நெருக்கடி அளிக்கும் ஆளுநர் ரவி… சமாளிப்பாரா முதல்வர் ஸ்டாலின்?!

டெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, தெலங்கானா, பஞ்சாப் உட்பட பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் சர்ச்சைகள் நிறைந்ததாகவே இருக்கின்றன. ‘துணை நிலை ஆளுநர் என்னைத் திட்டுவது போல, என் மனைவிகூட என்னைத் திட்டியதில்லை’ என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் புலம்பும் அளவுக்கு டெல்லி துணைநிலை ஆளுநரின் செயல்பாடு இருக்கிறது.

ரவி, ஸ்டாலின்

கேரளாவில், ‘நிதியமைச்சர் கே.என்.பாலகோபாலை பதவிநீக்கம் செய்யுங்கள்’ என்று முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதும் அளவுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் செயல்பாடு இருக்கிறது. மேற்கு வங்கத்தில் ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே நிலவிய கடுமையான மோதல் போக்கு, குடியரசுத் துணைத்தலைவராக ஜக்தீப் தன்கர் ஆன பிறகுதான் முடிவுக்கு வந்தது.

தமிழகத்தில் ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிவரும் பல கருத்துக்கள் மாநில அரசின் நிலைப்பாடுக்கு எதிராகவே உள்ளது. ஆளுநர் பேசுகிற பல கருத்துக்கள் தி.மு.க அரசின் கொள்கை நிலைப்பாட்டுக்கு எதிரானவையாக இருக்கின்றன. தமிழ்நாட்டின் இயல்புக்கு மாறாக அவர் பேசிவருவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

ஆர்.என்.ரவி

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதா உட்பட பல மசோதாக்களை பல மாதங்களாகக் கிடப்பில் போட்டுவைத்திருக்கும் ஆளுநர் ரவியின் செயல் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டுவருகிறது. 2021, செப்டம்பர் 18-ம் தேதி தமிழகத்தில் ஆளுநராகப் பதவியேற்றதிலிருந்து இன்றுவரையில் சர்ச்சைகளின் மையமாகவே ராஜ்பவன் இருந்துவருகிறது.

கோவையில் அக்டோபர் 23-ம் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கை என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றுவதற்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார். தற்போது, என்.ஐ.ஏ விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரைக்க காலதாமதம் செய்தது ஏன் என்று ஆளுநர் ரவி பேசியிருப்பது தி.மு.க தரப்பை கொந்தளிக்க வைத்தது.

இந்த நிலையில், ‘எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும். அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல’ என்று ஆளுநர் ரவி பேசிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.  

ஸ்டாலின்

“தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல், நாள்தோறும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதற்குக் காரணம், தமிழ்நாட்டில் தேவையற்ற வீண் சர்ச்சைகளை உருவாக்கி குழப்பம் ஏற்படுத்தும் நோக்கமா, அல்லது தன்னை நோக்கிய கவனிப்பு எப்போதும் இருக்க வேண்டும் என்ற தாகமா எனத் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும், சனாதனம், ஆரியம், திராவிடம், பட்டியலின மக்கள், திருக்குறள் குறித்து அவர் கூறும் கருத்துகள் அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன. ஆளுநரின் தனிப்பட்ட ஆன்மிக நம்பிக்கைகள் குறித்து நமக்கு எந்த விமர்சனமும் இல்லை; அது பற்றி கவலைப்படவுமில்லை. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு, பழைமைவாத நச்சரவங்களை நாட்டில் நடமாட விடுவது அவருக்கும் அழகல்ல; அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல” என்று காட்டமாக அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்கள். 

இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம். “ஆர்.என்.ரவி, ஆரம்பத்திலிருந்து ஒரு அஜெண்டாவுடன் செயல்படுவது மாதிரித்தான் இருக்கிறது. தி.மு.க அரசுக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே டெல்லியிலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறார் என்றுதான் பார்க்க வேண்டியிருக்கிறது. நீட் மசோதா உட்பட 18 மசோதாக்களை பல மாதங்களாக கிடப்பில் போட்டுவைத்திருந்தார். பெரிய போராட்டத்துக்குப் பிறகுதான் நீட் மசோதாவை டெல்லிக்கு அனுப்பினார். இப்போதும், 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டுவைத்திருக்கிறார்.

அவரது பேச்சுகளும் சர்ச்சைக்குரியவையாகவே இருக்கின்றன. திராவிட மாடல் அரசு என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆளுநரோ, திராவிடம் என்ற வார்த்தை எத்தனை நூற்றாண்டுகளாக இருக்கிறது… அதன் வரலாறு என்ன என்பது பற்றி தெரியாமல் பேசுகிறார். திருக்குறளை மொழிப்பெயர்த்த ஜி.யு.போப், அதிலிருந்த ஆன்மிகத்தை விட்டுவிட்டார் என்று பேசுகிறார். இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க முடியாது என்று பேசுகிறார்.

ப்ரியன்

இது மாநில அரசை சங்கடப்படுத்துகிற வேலை. தன்னுடைய அதிகாரத்தைத் தாண்டி ஆளுநர் பேசுகிறார். கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ-வுக்கு கொடுக்க ஏன் தாமதமானது என்று கேட்கிறார். உள்ளூர் போலீஸார் ஆரம்பக்கட்ட விசாரணையை முடித்துவிட்டுத்தான், என்.ஐ.ஏ-வுக்கு வழக்கை மாற்றுவார்கள் என்பது ஐ.பி.எஸ் பணியில் இருந்த அவருக்குத் தெரியாதா? இந்தியாவில் பல வழக்குகள், சம்பவம் நிகழ்ந்து பல மாதங்களுக்குப் பிறகு என்,ஐ,ஏ-விடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.

அரசியல் ரீதியாக ஆளுநர் செயல்படுகிறார். எனவேதான், இவரின் தொடர்ச்சியான செயல்பாடுகளைப் பார்த்துவிட்டு, தி.மு.க கூட்டணிக் கட்சிகள் தற்போது கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றன. ஆளுநரின் சர்ச்சைப் பேச்சுகள், செயல்பாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இதுவரை கடுமையாக எதிர்வினை ஆற்றவில்லை. மிகவும் அடக்கமாகவே இப்பிரச்னையை அவர் சமாளித்துவருகிறார். ஒரு கட்டத்தில், தனது அணுகுமுறையை முதல்வர் ஸ்டாலின் மாற்றிக்கொள்ளும் சூழல் வரலாம். அப்போது, முதல்வரின் அணுகுமுறை கடுமையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது” என்கிறார் ப்ரியன்.

முதல்வர் ஸ்டாலின்

ஏற்கெனவே, ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து தி.மு.க-வின் மக்களவைக் குழு தலைவரான டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்திலேயே பேசினார். ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகரிடம் டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்தார். 2024-ல் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், மோதல் மேலும் அதிகரிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இதனிடையே ஆளுநர் ஆர்.என் ரவியை திரும்ப பெற குடியரசுத் தலைவரிடம் முறையிட தி.மு.க முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக தி.மு.க மற்றும் தோழமைக் கட்சி எம்.பி-களுக்கு அதன் பொருளாளரும், எம்.பி-யுமான டி.ஆர் பாலு கடிதம் எழுதியுள்ளார். அதில், “தி.மு.க அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்து, குறிப்பானையில் கையெழுத்து இடவேண்டும். அதை குடியரசுத் தலைவரிடம் கொடுக்க உள்ளோம். ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.