பெங்களூரு: இந்தியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ‘கூ’ சமூக வலைதளம் 5 கோடி டவுன்லோடுகளை கடந்துள்ளது. சமூக வலைதள சேவையை வழங்கி வரும் இந்நிறுவனம், ட்விட்டருக்கு மாற்று என சொல்லப்படுகிறது. தமிழ் உட்பட மொத்தம் 10 மொழிகளில் இதன் சேவை கிடைக்கப்பெறுகிறது.
கடந்த 2021 வாக்கில் இந்தியாவில் ட்விட்டருக்கு எதிரான கருத்துகள் எழுந்திருந்தது. அப்போது லைம்லைட்டுக்குள் வந்தது கூ. ட்விட்டரை போலவே இதிலும் பயனர்கள் பதிவுகளை பகிரலாம். கடந்த ஜனவரி முதல் இந்த தளத்தில் பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக அந்த நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7,500 ஹை-புரொபைல் பயனர்கள் உட்பட மில்லியன் கணக்கிலான மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்முனைவோர்கள், கவிஞர்கள், தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், நடிகர்கள் என பலரும் தங்கள் சொந்த மொழியில் பதிவுகளை பகிர்ந்து வருவதாக ‘கூ’ தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த காரணத்தால் தங்கள் நிறுவனம் இந்த வளர்ச்சியை எட்டியுள்ளதாக கூ நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான அப்ரமேயா ராதாகிருஷ்ணா தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பில் இருந்து முதலீடுகளை பெற்றுள்ளது கூ.
தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் போன்ற மொழிகளில் கூ இயங்கி வருகிறது.