புதுச்சேரி: புதுச்சேரி மாநில விடுதலை தின விழா நேற்று அரசு சார்பில் கடற்கரை சாலையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை 8:55 மணிக்கு விழா அரங்கிற்கு வந்த முதல்வர் ரங்கசாமி கொட்டும் மழையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:
புதுச்சேரியின் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் என வீர வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். எனது தலைமையிலான அரசு கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறக்கூடிய, பல்வேறு திட்டப்பணிகளை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது.
அரசின் திட்டங்கள் மக்களை விரைவாக சென்றடைய அரசு இயந்திரம் திறம்பட இயங்க வேண்டியது அவசியம். அதற்கு அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும். எனவே, பல்வேறு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான மாபெரும் பணி நியமன இயக்கத்தை எனது அரசு தொடங்கியுள்ளது.
1056 பேருக்கு அரசு பணி
முதற்கட்டமாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 35 பணியிடங்களும், காவல்துறை -339; தீயணைப்பு துறை-75; வேளாண்துறை-33; தொழில் மற்றும் வணிகத்துறை-19; போக்குவரத்து துறை-39; பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை-53; நில அளவை மற்றும் பதிவேடுதுறை-70; கணக்கு மற்றும் கருவூலத்துறை-56; திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை-9; சுகாதாரத்துறை-163; பணியாளர் மற்றும் நிர்வாக துறை-165 இடங்கள் என மொத்தம் 1,056 இடங்கள் விரைவாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு இன்று 2ம் தேதி முதல் அந்தந்த துறை சார்பில் வெளியிடப்படும். மீதமுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை வரும் காலங்களில் தொடரும். அரசு காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப வழி செய்த பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சாலை சீரமைப்பு
சாலை சீரமைப்பு பணிக்காக எம்.எல்.ஏ.,தொகுதி மேம்பாட்டு நிதியில் முதல் கட்டமாக ரூ.36.30 கோடியும், இரண்டாம் கட்டமாக ரூ.15.12 கோடி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் புதுச்சேரி கிராமங்களில் மொத்தமுள்ள 1.14 லட்சம் வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஜனாதிபதி விருது புதுச்சேரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆன்மீகச் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 7 கோடி செலவில் திருக்காஞ்சி ஸ்ரீகங்கை வராக நதீஸ்வரர் கோவில் மற்றும் வில்லியனுார் கோகிலாம்பிகை திருக்காமீஸ்வரர் கோவில்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் சிட்டி திட்டம்
இத்திட்டத்தின் கீழ் ரூ.2.63 கோடி மதிப்பில் சித்தன்குடி செல்லான் நகர் முதல் உப்பார் வடிகால் வரையிலும், பாலாஜி நகர் சாலையில் கிருஷ்ணா நகர் முதல் தென்றல் நகர் வரை மழைநீர் வாய்க்கால் இணைப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எல்லைப்பிள்ளைச்சாவடி சந்திப்பில் அண்ணா நகர் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் புகுவதைத் தடுக்க மேட்டு வாய்க்கால் மீது இரண்டு சிறு பாலங்கள் ரூ.3.73 செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
தடுப்பணை
செல்லிப்பட்டு, சங்கராபரணி ஆற்றின் குறுக்கே நபார்டு வங்கி உதவியுடன் ரூ. 20.40 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. பாகூர் வெள்ளவாரி அணை குறுக்கே ரூ .8.18 கோடி செலவில் ஒற்றை வழிப் பாலம் மற்றும் பாகூர் ஏரிக்கரை சாலை அமைக்கப்பட உள்ளது. காவல் துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. இதனால் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வார இறுதி நாட்கள் மட்டுமல்லாது வார நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளைக் கவர அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
கடல் அரிப்பை தடுக்க ஆய்வு
கடலரிப்பு காரணமாக கடலோர கிராமங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.உலகளாவிய பருவ நிலை மாற்றத்தின் விளைவாக, அண்மைக் காலங்களில் கடலரிப்பின் வேகம் அதிகரித்துள்ளது. புதுச்சேரி, தமிழகப் பகுதிகளும் இடையிடையே வருவதால் ஒரு பொதுவான தீர்வு காண வேண்டியது அவசியமாகிறது. எனவே, வடக்கே மரக்காணம், தெற்கே கடலுார் வரையிலும், காரைக்காலில் துவங்கி நாகப்பட்டினம் வரையிலும் முழுமையான ஆய்வு மேற்கொள்ள தேசிய கடலோர ஆய்வு மையத்தை கேட்டுக் கொண்டுள்ளோம்.
கடற்கரை சுற்றுச்சூழலைப் பாதிக்காமலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையிலும் விரிவான கடற்கரை மேலாண்மைத் திட்டத்தை அந்த நிறுவனம் தயாரித்து அளிக்க உள்ளது. மத்திய புவி அறிவியல் மையம் அளிக்கும் அத்திட்டத்தை புதுச்சேரி அரசு விரைவாக நிறைவேற்றி மீனவர்களின் நலனைப் பாதுகாக்கும் என்றார்.
தொடர்ந்து முதல்வர் பேசுகையில், புதுச்சேரி மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்து தனது உரையை முடித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்