சத்தீஸ்கர் மாநிலத்தில், மாட்டிறைச்சி விற்ற இருவரை ஒரு கும்பல் அரைநிர்வாணமாக்கி பெல்ட்டால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிலாஸ்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நர்சிங் தாஸ் (Narsingh Das), ராம்நிவாஸ் மெஹர் (Ramnivas Mehar) ஆகிய இருவர் வெள்ளைநிற சாக்கு மூட்டையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஒருகும்பல் அவர்களிடம், `சாக்கில் என்ன இருக்கிறது?’ எனக் கேட்டிருக்கிறது. அதற்கு, சாக்கில் மாட்டிறைச்சி இருக்கிறது என அவர்கள் கூறியிருக்கிறார்கள். பின்னர் இது தொடர்பாக ஒருவர் போலீஸில் புகாரளிக்க, போலீஸாரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மாட்டிறைச்சியை பறிமுதல்செய்து அவர்கள் இருவரையும் கைதுசெய்தனர். ஆனால் இதற்கிடையில்தான் மாட்டிறைச்சி விற்ற நபர்கள், அந்தக் கும்பலால் அரைநிர்வாணமாக்கப்பட்டு கடுமையான தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
பின்னர் இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரியொருவர், “குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து 33.5 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதோடு, அவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். கைதுசெய்யப்பட்ட இருவரும், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், மீட்கப்பட்ட இறைச்சி கால்நடை மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் இந்த பரிசோதனை அறிக்கை குறித்து எந்த விவரமும் இல்லை” எனக் கூறியிருக்கிறார். மாட்டிறைச்சி விற்றவர்கள் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானபோதும், அதுபற்றி போலீஸ் தரப்பிலிருந்து எந்தவொரு பேச்சும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.